Published : 17 Sep 2022 05:46 AM
Last Updated : 17 Sep 2022 05:46 AM
தாஷ்கண்ட்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்,
ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச அரசியல் ஒழுங்கை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு அதை நோக்கி நகர கடந்த 2001-ல் உருவாக்கப்பட்டதுதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) ஆகும். இந்த அமைப்பில் சீனா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் பார்வையாளராக ஈரான், ஆப்கானிஸ்தான், பெலா ரஸ் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகள் உள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற கடைசி நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
கரோனா தொற்று காலத்துக்குப் பின்னர், உலகம் பொருளாதார மீட்சிக்கான சவாலை எதிர்கொண்டு வருகிறது. கரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்
நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் வெகுவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான ஒரே உலகளாவிய மையம் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு பாரம்பரிய மருத்துவத்துக்காக சர்வதேச மையம் உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
புதினுடன் மோடி பேச்சு
மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறும்போது, "இந்தியாவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய காலம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறிச் செல்லலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனுடனான பிரச்சினையை ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது” என்றார்.
அப்போது புதின் பதில் அளிக்கும்போது, "உக்ரைனுடனான மோதலை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவுக்கு கொண்டு வருவேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT