Published : 16 Sep 2022 02:54 PM
Last Updated : 16 Sep 2022 02:54 PM

உலகின் நம்பர் 2 பணக்காரர் ஆனார் கெளதம் அதானி - பின்னுக்குத் தள்ளப்பட்டார் ஜெஃப் பெசோஸ்

கெளதம் அதானி.

புதுடெல்லி: ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தினார் அதானி குழுமத் தலைவரும், இந்தியருமான கெளதம் அதானி. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருடன் மற்றொரு இந்தியரான முகேஷ் அம்பானியும் இந்தப் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருக்கிறார்.

அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பசுமை எனர்ஜி, அதானி துறைமுகங்கள், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் என 4.97 முதல் 3.45 சதவீதம் வரை அவரது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றம் வியாழன் அன்று நடந்தது. அதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி உயர்ந்துள்ளது. அதனால் அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்தப் பட்டியலில் எலான் மஸ்க் சுமார் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் பெசோஸ் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸ், வாரன் பஃபெட், முகேஷ் அம்பானி, லேரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்ற நபர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு இடங்களில் எலான் மஸ்க் மற்றும் பெசோஸ் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் வாக்கில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடம்பிடித்தபோது அந்த இடத்தை எட்டிய முதல் ஆசியர் என அறியப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x