Published : 14 Sep 2022 04:05 AM
Last Updated : 14 Sep 2022 04:05 AM
ஆசியாவில் வேகமாக வளரும் பொருளாதார நகராக கோவை மாவட்டத்தை மாற்றும் நோக்கத்தில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘கோவை நெக்ஸ்ட்’ என்ற செயல்திட்டம் தொடக்கவிழா கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சிஐஐ தென்மண்டல தலைவர் சுசித்ரா, துணைத் தலைவர் கமல்பாலி, கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் ‘கோவை நெக்ஸ்ட்’ செயல்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
சிஐஐ கோவை மண்டல தலைவர் பிரசாந்த் பேசும்போது, ‘‘தேசிய அளவில் வேகமாக வளர்ந்துவரும் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்கும் போதும், உலகளவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் கோவை பின் தங்கியுள்ளது.
எனவே, கோவையில் பன்னாட்டு பிரபல தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், ஏற்கெனவே கோவையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் கட்டமைப்பை உலக தரத்தில் மேம்படுத்த உதவும் நோக்கிலும் ‘கோவை நெக்ஸ்ட்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 13 சதவீதம் பங்களிப்பு கொண்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள செயல்திட்டத்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தை அடைய இணைந்து செயல்பட உள்ளோம்” என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசும்போது, ‘‘கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதுபோன்ற செயல்திட்டங்கள் மிகவும் பயன் தரும். நாடு 100-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது கோவை மாவட்டம் மிகச் சிறப்பான வளர்ச்சியுடன் திகழும்’’என்றார்.
‘கோவை நெக்ஸ்ட்’ செயல்திட்ட உறுப்பினர்கள் சஞ்சய் ஜெயவர்தனவேலு, சுந்தரராமன், ஜெய்ராம் வரதராஜ், அர்ஜூன் பிரகாஷ், ஜெயகுமார் ராம்தாஸ், நந்தினி, ரவிசாம், சங்கர் வாணவராயர் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT