Published : 13 Sep 2022 09:07 AM
Last Updated : 13 Sep 2022 09:07 AM
மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என, தமிழக முதல்வருக்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சைமா) தலைவர் ரவிசாம்:
எரிசக்தித் துறையை தொழில்துறை ஆதரவுடன் மாற்றும் வகையில் பல்வேறு கொள்கை சார்ந்த முடிவுகளை முதல்வர் எடுத்து வருவது பாராட்டத்தக்கது. மிகப்பெரிய உயர் அழுத்த மின் நுகர்வோராக விளங்கும் தமிழக ஜவுளித்தொழிலை மின்கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும்.
ஏற்கெனவே குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுவதால் அங்குள்ள நூற்பாலைகள் தங்களின் போட்டித்திறனை அதிகரித்து ஒரு கிலோ நூலை ரூ.10 முதல் ரூ15 வரை குறைவாக விற்பனை செய்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், மின்கட்டண உயர்வு தமிழக ஜவுளித்தொழிலின் போட்டியிடும் திறனை பாதிக்கும். நூல் விலை ஒரு கிலோ ரூ.5 வரை அதிகரிக்கும். 25,000 கதிர்கள் கொண்ட நூற்பாலைக்கு ஆண்டுக்குரூ.1.2 கோடி வரை மின்கட்டணம் அதிகரிக்கும்.
ஏற்கெனவே பருத்தி விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஜவுளித் தொழில் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. எனவே, நிலைமை சீராகும் வரையாவது மின்கட்டண உயர்வை தள்ளிவைத்திருக்கலாம்.
மின்கட்டண உயர்வு மரபுசாரா எரிசக்தித் துறைகளில் புதிய முதலீடுகள் வருவதை தடுக்கும். தமிழக ஜவுளித் தொழிலின் உலகளாவிய போட்டித் திறனை நிலைநிறுத்தவும் ஆண்டுக்கு ஆண்டு கட்டணம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி: கருத்து கேட்பு கூட்டங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறைந்த அழுத்த மின்நுகர்வோ ருக்கு உச்ச நேர பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். உச்ச நேரம் என்பது தற்போது 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை முன்பு இருந்ததை போன்று 6 மணி நேரமாக மாற்றியமைக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஆண்டுதோறும் மின்கட்டணத்தில் மாற்றம் செய்யப்படும் என்ற அறிவிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம்:
ஜவுளித் தொழிலுக்கு முக்கிய உயிர் நாடியாக இருப்பது மின்சாரம். தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது. ஒட்டுமொத்த ஜவுளித் தொழில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.
வரி உயர்வு, மின் கட்டண உயர்வுகளை எப்படி எதிர்கொள்வது என அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்கள் அமைப்புகளும், அதை சார்ந்த தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழக முதல்வரை சந்திக்க முன்வர வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் அரசு, அவர்களுக்கு சலுகை விலையில் இடம், தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் வழங்குகிறது.
ஆனால், விவசாயத்துக்கு அடுத்தபடியாக விளங்கும் தொழிலாக ஜவுளித் தொழில் உள்ளது. பின்னலாடை தொழிலில், ரூ.65 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வியாபாரம் மற்றும் ஏற்றுமதி செய்து வருகிறோம். வெளிநாட்டு தொழில் துறைக்கு காட்டும் அக்கறையை, உள்நாட்டு தொழிலுக்கும் காட்ட வேண்டும்.
மின்கட்டண உயர்வால் சிறு,குறு தொழில் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. இந்தியாவிலேயே தொழில் நிறைந்த மாநிலம் தமிழகம். அதை தக்கவைக்க வேண்டும். மின் கட்டண உயர்வை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT