Published : 11 Sep 2022 11:59 PM
Last Updated : 11 Sep 2022 11:59 PM

2047-க்குள் உலக வளர்ச்சியை இயக்கும் சக்தியாக இந்தியா மாறும்: பியூஷ் கோயல்

அமைச்சர் பியூஷ் கோயல்.

2047-க்குள் உலக வளர்ச்சியை இயக்கும் சக்தியாக மாறும் பாதையில் இந்தியா உள்ளது என்று மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். தெற்கு கலிஃபோர்னியாவின் வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, வெளிப்படையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு பொதுவான நோக்கத்தைப் பகிர்ந்துகொள்வதில் ஒத்த கருத்துள்ள நாடுகளுக்கு இந்தியா-பசிஃபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) முடிவு என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் என்று அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். இந்தியா-பசிஃபிக் பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக நிலைத்த மற்றும் திறந்த பொருளாதாரங்கள் தங்களுக்கிடையே பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஒன்று சேர்ந்து வருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய கோயல், இந்தியாவில் நிகழும் மாற்றத்திற்கான பணிகள் உலகப் பொருளாதாரங்களில் நாட்டை 5வது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்றார். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களின் தாக்கத்தை மதிப்ப்பீடுசெய்த திரு கோயல், 2047-ல் இந்தியா 35-45 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் மதிப்பீடு, இந்தியாவை வளர்ந்த நாடுகளின் நிலைக்கு அழைத்துச் செல்கிறது என்றார்.

இந்தியா இன்று வாய்ப்புகளின் பூமியாகவும், அமெரிக்காவின் வணிக சமூகத்திற்கு சாத்தியமான சந்தையாகவும் உள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், மக்கள்தொகையின் பங்கும், ஆர்வமுள்ள இளைஞர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிய வாய்ப்பை வழங்கக் கூடுதல் ஆதாயமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தூய்மையான எரிசக்திக்கு இந்தியாவும் விரைந்து மாறிவருகிறது என்று குறிப்பிட்ட கோயல், 2030-க்குள் 500 ஜிகாவாட் பசுமை எரிசக்தித் திறனை அடைய நாங்கள் விரும்புகிறோம் எனறார்.

அண்மையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் ஒவ்வொருக்கும் கடமை உணர்வைக் கொண்டு வந்ததை நினைவுகூர்ந்த கோயல், 2047-க்குள் வளமான மற்றும் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியர்களும் வெளிநாடுவாழ் இந்தியர்களும், கூட்டான வேலைக்கும், கூட்டு முயற்சிகளுக்கும் தங்கள் கடமையைச் செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற தயாரிப்புகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர், உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவழியினர் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தால், கோடிக்கணக்கான இந்திய கைவினைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறி உரையை நிறைவுசெய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x