Published : 10 Sep 2022 08:44 PM
Last Updated : 10 Sep 2022 08:44 PM

“இந்தியா 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும்” - நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது என்றும், இந்தியா 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும் என்றும் மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள ஐஐஐடிடிஎம்-ன் 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: “தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பெற்றோர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும். அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.

விவசாயிகளும் ராணுவ வீரர்களும் முன்னேற வேண்டும் என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவர் கூறியது போல ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியம். இந்தியா 2047-ல் பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2028-ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65 சதவீதமாக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047-ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும். உலக அளவில் 58 சி.இ. ஓ.க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள்.

சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள 25 சதவீத நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. 100 யூனிகார்ன் நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன. இது கடந்த 5 வருடங்களில் அதிகரித்துள்ளது. 2014-15-ல் 42,000 என இருந்த காப்பீட்டு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, இந்த வருடம் 66,000 ஆக அதிகரித்துள்ளன. புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய்நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

முன்னதாக ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம் கல்வி நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். ஏஐஐஓடி ரோபோடிக்ஸ் மையத்தையும் அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐஐஐடிடிஎம் நிறுவன குழுத் தலைவர் பேராசிரியர் எஸ் சடகோபன், ஐஐஐடிடிஎம் இயக்குனர் டி வி எல் எம் சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x