Published : 10 Sep 2022 05:31 AM
Last Updated : 10 Sep 2022 05:31 AM
புதுடெல்லி: சட்டவிரோத கடன் செயலிகளை தடைசெய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், அரசு அனுமதி பெற்று இயங்கும் கடன் செயலிகளின் பட்டியலைத் தயாரிக்கும்படி ரிசர்வ் வங்கியிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி பட்டியலைத் தயாரித்தப் பிறகு, அந்தப் பட்டியலை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சம் ஆய்வு செய்யும். அந்தப் பட்டியலில் இல்லாத செயலிகள் ஆப் ஸ்டோர்களிலிருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கடன் செயலிகளின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. வருமான ரீதியாக பின்தங்கி இருப்பவர்களைக் குறிவைத்து இந்தச் செயலிகள் செயல்படுகின்றன.
அதிக வட்டி
அவர்களுக்கு அதிக வட்டிக்கு கடன் வழங்கி, அதை வசூலிக்க மிக மோசமான வழிமுறைகளை அந்நிறுவனங்கள் கையாளுகின்றன. சட்டவிரோத செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள், அதன் பிறகான வட்டி வசூல் நெருக்கடியால் தற்கொலை செய்யும் நிகழ்வும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இத்தகைய செயலிகளை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் பண மோசடி, வரி ஏய்ப்பு, வாடிக்கையாளர்களின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மோசடிச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனவா என்பதை கண்காணிக்கும்படி நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், போலி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின்மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத கடன் செயலிகள் குறித்து மக்களிடையேயும் வங்கி அதிகாரிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் இக்கூட்டத்தில் அதிகாரிகளை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT