Published : 02 Oct 2016 11:22 AM
Last Updated : 02 Oct 2016 11:22 AM
கோத்ரெஜ் நூறாண்டுகளைக் கடந்த (1897) வெற்றிகரமான இந்திய நிறுவனம். இந்திய வீடுகளில் கோத்ரெஜ் பிராண்ட் அபிமான பிராண்டாக ஏதாவது ஒரு ரூபத்தில் வியாபித்திருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களான ரெஃபரிஜிரேட்டர், வாஷிங் மெஷின் முதல் விலை உயர்ந்த பொருள்களை வைக்கும் லாக்கர் வரை கோத்ரெஜ் தயாரிப்புக்கு தனி இடம் உண்டு. கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து, எல்லாவற்றிலும் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளது. அழகு சாதனப் பொருள் தயாரிப்பிலும் இந்த நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமுறைகளைக் கடந்து தனித்துவமாக விளங்கும் கோத்ரெஜ் குழுமத்தின் கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, நான்காவது தலைமுறையைச் சேர்ந்த (ஜிசிபிஎல்) நிசாபா கோத்ரெஜ் செயல் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். 2014-ம் ஆண்டில் தனது ஒரு மாத குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டே இயக்குநர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தவர். கடந்த வாரத்தில் முன்னணி ஆங்கில பொருளாதார நாளிதழ் 40 வயதுக்குள்பட்ட சிறந்த நிர்வாகிகள் வரிசையில் இவரையும் பட்டியலிட்டுள்ளது.
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கோத்ரெஜ் நிறுவனத்தின் நான்கு புதிய தயாரி்ப்புகளை அறிமுகம் செய்வதற்காக மும்பையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இனி அவரது பேட்டியிலிருந்து…
புதிய தயாரிப்புகள் பற்றி கூறுங்களேன்.
முதலாவது கோத்ரெஜ் குட்நைட் ஃபேப்ரிக் ரோலான்., இது குழந்தைகளைக் கொசு கடிப்பதிலிருந்து காப்பதற்கு உதவும். குழந்தைகள் விளையாடப் போகும்போது, சட்டையின் தோள்பட்டை பகுதியில் முன்புறம் இரண்டு டாட், அதேபோல கால் அரைச் சட்டையில் முழங்காலுக்கு மேல் இரண்டு டாட் வைத்துவிட்டால் அதிலிருந்து வெளிவரும் மணம் கொசுவை விரட்டும். இது 8 மணி நேரம் வரை கொசுக் கடியிலிருந்து காக்கும். இது முற்றிலும் இயற்கையான யூகலிப்டஸ் மற்றும் சிட்ருலினா எண்ணெய் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் இயற்கையானது. துணிகளின் மேல் பகுதியில் தடவுவதால் எவ்வித கறையும் ஏற்படாது.
அடுத்ததாக பிறந்த குழந்தைகளுக்கென்றே குட்நைட் பேட்சஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை குழந்தை தூங்கும் தொட்டிலின் மேல்புறம் ஓட்டிவிட்டால் கொசு கடிக்காது.
மூன்றாவதாக குட்நைட் ஜெல், இதுவும் கொசு கடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும்.
ஏற்கெனவே பல்வேறு கொசு விரட்டிகள் உள்ள நிலையில் இம்மூன்று தயாரிப்புகளுக்கு அவசியம் என்ன? உங்களது முந்தைய தயாரிப்புகளின் விற்பனையை இது பாதிக்காதா?
டெங்கு மற்றும் சிக்கன் குனியா கொசுக்கள் நன்னீரில் வளரக்கூடியவை. மேலும் இவை பகலில்தான் கடிக்கிறது. இதனால் குழந்தைகள் பற்றிய கவலை பெற்றோருக்கு அதிகம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு தரப்பினரது தேவைக்கேற்ப பொருள்கள் உள்ளதால் முந்தைய தயாரிப்புகளின் விற்பனை பாதிக்காது. மேலும் எங்களது விற்பனை சந்தை மேலும் அதிகரிக்கவே இது உதவும்.
பெரும்பாலான வெளிநாட்டு எப்எம்சிஜி நிறுவனங்கள் இந்தியச் சந்தையை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதன் காரணம் என்ன? உங்களது வருமானத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு எவ்வளவு?
இது உத்தி சார்ந்த அணுகு முறைதான். எங்களது வருமானத்தில் வெளிநாட்டு வருமானம் 50 சதவீத அளவுக்கு உள்ளது. மேலும் பல நிறுவ னங்களை கையகப்படுத்தும் திட்டமும் உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது தகுதிபடைத்த நிறுவனங்களை வெளிநாட்டில் மட்டுமல்ல உள்நாட்டிலும் வாங்குவோம்.
குட்நைட் கொசு விரட்டிகளில் பல ரகங்கள் ஏற்கெனவே உள்ள நிலையில் புதிய தயாரிப்புகளுக்கு அவசியம் என்ன? இது எந்த அளவுக்கு உங்களது விற்பனை வருமானத்தை அதிகரிக்க உதவும்?
பொதுவாக மக்கள் வீட்டிற்குள் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் 10 சதவீத அளவுக்குக் கூட வெளியில் செல்லும்போது எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் 95 சதவீத மக்கள் மலேரியா மற்றும் டெங்கு கொசு கடியின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். டெங்கு ஜூரத்தின் தீவிரம் குறித்து பொதுமக்கள் அறிந்திருந்தபோதிலும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முயல்வதில்லை. குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுகின்றனரே தவிர, எப்படி காப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். கொசுக் கடிக்கு பயந்து குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குழந்தையின் உடல் செயல் திறனை முடக்கிவிடும். இதுபோன்ற வற்றிலிருந்து காப்பதற்கென்றே இம் மூன்று தயாரிப்புகளும் கண்டுபிடிக்கப் பட்டன.
எப்எம்சிஜி தயாரிப்புகளில் நீங்கள் டெய்ரி சார்ந்த உற்பத்தியில் இறங்கவில்லையே, எதிர்காலத் திட்டம் உள்ளதா?
கோத்ரெஜ் அக்ரோ நிறுவனம்தான் விவசாயம் சார்ந்த பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. முற்றிலும் உரக் கலப்பில்லாத பொருள் உற்பத்தியில் கோத்ரெஜ் அக்ரோ ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் டெய்ரி நிறுவனத்தில் கணிசமான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக பால்பொருள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபடுவது நிச்சயம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிறுவனம் எவ்வளவு தொகை ஒதுக்குகிறது?
எங்களது புதிய தயாரிப்புகளின் வரவுக்கு முக்கியக் காரணமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுதான். முன்பி ருந்த அளவைக் காட்டிலும் மிகப் பெரியதாக ஆர் அண்ட் டி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளி லும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது.
பதஞ்சலி தயாரிப்புகளின் வரவு குறித்து…
பதஞ்சலி தயாரிப்புகள் வந்தபிறகு தான் மக்களுக்கு இயற்கையான பொருள்கள் மீதான ஆர்வம் மேலோங்கியது என்றே சொல்லலாம். பதஞ்சலியில் கிடைக்கிறதே உங்களிடம் அத்தகைய இயற்கை தயாரிப்பு உள்ளதா என்று எங்களிடம் கேட்கும் வாடிக்கையாளர்கள் நாங்கள் அதைத் தரும்போது மகிழ்ச்சியோடு ஏற்கின்றனர். இந்தியா மிகுந்த இயற்கை வளமுள்ள நாடு. இயற்கை பொருள்களோடு இணைந்து வாழ்வது பல வகையிலும் சிறந்ததே.
எப்எம்சிஜி பிரிவில் கொசு விரட்டி உள்ளிட்டவற்றின் பங்களிப்பு இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கூற வேண்டும்.
மத்தியப் பிரதேசத்தில் கொசுவால் ஏற்படும் ஆபத்து மற்றும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்க 2 கிராமங்களை தத்தெடுத்து அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இத்திட்டம் பலனளிக்கும் பட்சத்தில் இது படிப்படியாக வேறு மாநில கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
எந்தெந்த பிரிவுகளில் வாய்ப்பு உள்ளது, எந்த சந்தையைக் குறிவைத்து ள்ளீர்கள்?
அழகு சாதனப் பொருள்கள் வரிசை யில் மேலும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளோம். இதில் வளமான வாய்ப்பு உள்ளது. அதேசமயம் கொசு விரட்டிகளுக்கான சந்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிகம் உள்ளது. இதிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஆன்லைன் சந்தையிலும் உங்கள் தயாரிப்புகள் கிடைக்குமா?
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 தயாரிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் சந்தையிலும் கிடைக்கும். விற்பனையை அதிகரிக்க எந்தெந்த வாய்ப்புகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT