Published : 02 Sep 2022 04:10 AM
Last Updated : 02 Sep 2022 04:10 AM

‘பருத்தி, நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால் திருப்பூரில் 90% சிறு, குறு தொழில்கள் அழியும்’

திருப்பூர்

பருத்தி, நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், திருப்பூரில் உள்ள 90 சதவீதம் சிறு, குறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழியும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.

அதிக பருத்தி உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, கனமழை மற்றும் பூச்சி தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி மூலம் விநியோக தேவையை பூர்த்தி செய்யும் கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

மறுபுறம், சீனாவில் கடுமையான வெப்பம் காரணமாக வரவிருக்கும் பருத்தி உற்பத்தி சீசன் பற்றிய அச்சம் மிக அதிகமாக உள்ளது. மிகப்பெரிய ஏற்றுமதியாளரான அமெரிக்காவில், பருத்தி விளையும் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இரண்டாவது பெரிய பருத்தி ஏற்றுமதியாளரான பிரேசில், அதிக வெப்பம் மற்றும் வறட்சியுடன் தொடர்ந்து போராடி வருகிறது.

உலக பருத்தி ஏற்றுமதியில் சரிபாதியைக் கொண்டுள்ள நாடுகளாக அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளன. தற்போது இரு நாடுகளும் உலகளாவிய பருத்தி ஏற்றுமதியை குறைக்கக்கூடிய பாதகமான வானிலையால், போராடிக் கொண்டிருக் கின்றன. மோசமான வானிலை காரணமாக சர்வதேச சந்தையில் பருத்தி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பருத்தி விலை மிக உயர்ந்த அளவை எட்டியது. பருத்தி விலை உயர்வு உலகம் முழுவதும் ஆடை விநியோகத்தில் உள்ள லாபத்தை குறைத்துள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெய்து வரும்கனமழையால் பருத்தி கையிருப்பு கவலை அளிக்கும் நிலையை அடைந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது: மிக மோசமான வானிலையால், பருத்தி சந்தை தள்ளாடத் தொடங்கி உள்ளது பின்னலாடைத் தொழில்துறையினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற பின்னலாடை நகரம் திருப்பூர்.

இந்தியாவில் பின்னலாடை என்றாலே திருப்பூர் தான் பிரதான அடையாளமாக உள்ளது. ஆனால் தற்போது இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொழிலை சோர்வுற வைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் சூழலில் பின்னலாடைத் தொழில் உள்ளது.

மத்திய,மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழகத்தில் முக்கியத்தொழிலாக ஜவுளித் தொழில் விளங்குகிறது.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறு, குறு தொழில் செய்பவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலையேற்றத்தால், ஒட்டுமொத்த ஜவுளி தொழிலே பாதித்துள்ளது. போதிய பருத்தி உற்பத்தி இருந்தும் இந்த நிலை இருப்பது தான் வேதனையாக உள்ளது.

இந்தியாவில் பருத்தியை பதுக்கி செயற்கையான விலையேற்றத்தை இடைத்தரகர்கள் ஏற்படுத்துகின்ற னர். இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியையும், நூலையும் ஏற்றுமதி செய்கின்றனர். இதை அரசுகண்டு கொள்வதில்லை. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் திருப்பூரில் உள்ள 90 சதவீதம் சிறு, குறு தொழில் செய்பவர்களின் வாழ்வா தாரம் முழுமையாக அழியும்.

மத்திய, மாநில அரசுகள் தனிக்குழு அமைத்து, இத்தொழிலை காக்க வழிவகை செய்ய வேண்டும். அனைத்து உற்பத்தியாளர்களும், அதை சார்ந்துள்ள ஜாப் ஒர்க் அமைப்புகளும், தொழிலாளர்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து பின்னலாடை தொழில் சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று வலியுறுத்த வேண்டும்.

இல்லையென்றால், திருப்பூரின் அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x