Last Updated : 02 Jun, 2014 10:00 AM

 

Published : 02 Jun 2014 10:00 AM
Last Updated : 02 Jun 2014 10:00 AM

வெற்றிக்கு வழிகாட்டும் முதலீட்டு மந்திரங்கள்

இன்று பலரும் கை நிறைய சம்பாதிக்கிறார்கள், இருந்தும் பணத்தைச் சேர்க்க முடியவில்லை என்று வருத்தப்படுவதுண்டு. அப்படி என்றால் அவர்கள் ஏதோ ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறார் கள் என்றுதானே அர்த்தம். அது என்னவென்று பார்த்தபோது எல்லோரும் செய்யக் கூடிய ஒரு விஷயம் நமக்குத் தெரிந்தது. அது என்னவென்று பார்ப்போம்.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் எல்லா செலவுகளும் போக மீத மிருந்தால் மட்டுமே பலர் சேமிக்கிறார்கள். பெரும்பாலும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் சேமிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

சம்பளம் செலவு = சேமிப்பு

மேலே உள்ள பார்முலாவைக் கொஞ்சம் மாற்றி அமைத்தால் நம்மால் கண்டிப்பாகச் சேமிக்க முடியும். அதாவது

சம்பளம்-சேமிப்பு=செலவு

நம்முடைய சேமிப்பையும் ஒரு செலவாகக் கருதினாலே நம்மால் சேமிக்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது. இது அவ்வளவு எளிதல்ல; ஆனால் நம்மால் முடியக் கூடியது. அதற் கான உதாரணத்தைப் பார்க்கலாம்.

இன்று ஒருவருடைய சம்பளத் தில் 50% வரை வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது. வேலைக் குச் சேர்ந்தவுடன் பெரும்பாலான பெற்றோர்கள் இதில் இணைந்து விடுகிறார்கள். மீதமுள்ள 50 சதவிகிதத்தில்தான் மற்ற அனைத்து செலவுகளையும் செய்யவேண்டும் என்ற ஒரு கட்டு பாட்டிற்குள் திணிக்கப்படுவதால், ஆரம்பத்தில் கடினமாக இருந்த ஒரு பழக்கம் நாளடைவில் பழகி விடுகிறது.

மேலும் இது மிகப் பெரிய தொகை, 20% சேமிப்பு என்பது ஒரு கடினமான பழக்கம் இல்லை, அதனுடைய பலனை உணர்ந்தால். மேலும் இந்த சேமிப்பை ஒரு வேளை குறிப்பிட்ட காலத்திற்கு உங்களால் தொடர முடியாவிட்டால், நிறுத்தி மீண்டும் தொடங்கலாம். ஆனால் வீட்டுக்கடனில் அது முடியாது.

நிறைய பேர் எந்த ஒன்றிலும் கமிட் செய்துகொள்ள விரும்பு வதில்லை. நாம் ஒன்றை கமிட் செய்யும்போது நாம் கூடுதலாக அதற்கு உழைக்கிறோம் என்பது தான் உண்மை. அதனால் நம் கண்ணுக்கு தெரிந்தவரை ஒரு செலவு இல்லையென்றால் அந்தப் பணத்தை முதலீடு செய்வது நல்லது. அதைவிடுத்து கமிட் செய் தால் என்னால் தொடர முடியா விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தேவையில்லை.

நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பு பவர் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப் பவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தால் கற்றுக் கொள்ள முடியாது. கொஞ்ச நேரம் பார்த்த பின்பு, குளத்தில் குதித்தால் தான் கற்றுக் கொள்ளமுடியும்.

2. முதலீட்டை சீக்கிரம் தொடங்குதல்

ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவு டன் முதலீட்டைத் தொடங்க வேண்டும். அது 1,000 ரூபாயாக இருந்தால்கூட பரவாயில்லை. பின்பு வருமானம் அதிகரிப்பதற் கேற்ப முதலீட்டை உயர்த்திக் கொள்ளலாம். ஐந்தில் வளையா தது ஐம்பதில் வளையுமா என்ற பழமொழிக்கேற்ப நாம் சிறு வயதில் தொடங்கவில்லை யென்றால் பின்பு ஆரம்பிப்பது கடினம். உதாரணமாக நம்முடைய பங்குச் சந்தை 1979- 80-ம் ஆண்டு களில் 100 புள்ளிகளுக்கு ஆரம்பிக் கப்பட்டது.

இன்று 24,000 புள்ளிகள் அதாவது 240 மடங்கு, கடந்த 35 வருடங்களில். இது கிட்டத்தட்ட 17% கூட்டு வட்டி. நீண்ட கால அடிப்படையில் 15% கூட்டு வட்டி எதிர்பார்ப்பது மிகவும் குறைந்த எதிர்பார்ப்பே.

பலர் கடந்த ஆண்டுகளைப் போல வரும் காலம் இருக்காது என்று சொல்வார்கள். நான் ஒன்றே ஒன்றை மட்டும் சிந்திக்கச் சொல்கிறேன். நம்முடைய தேவைகள் கடந்த ஆண்டுகளைப் போல இருக்குமா, குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றால் எல்லோருடைய ஒருமித்த பதில் நம்முடைய தேவைகள் குறைவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அதனால் வரும் காலங்களிலும் 15% கிடைப்பதற் கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

3. கூட்டு வட்டியின் அசுர பலம்

கூட்டு வட்டியை உலகின் எட்டா வது அதிசயம் என்று கூறுகிறார் கள். ஆரம்பத்தில் அது மிகச் சாதாரணமாகத் தோன்றும், 10 வருடம் தாண்டிய பிறகு அதனுடைய பலம் எல்லோராலும் அறியப்படும். உதாரணமாக ஒருவருடைய முதலீடு 10 வருடங்

களில் 15% கூட்டு வட்டியில் 4 மடங்கு ஆகிவிடும். அதே பணம் 15 வருடங்களில் 8 மடங்கும், 20 வருடத்தில் 16 மடங்கும் ஆகி விடுவதற்கான வாய்புகள் மிக அதிகம். 10 வருட இடைவெளி 4 மடங்கு என்பது 16 மடங்கு ஆகிவிட்டது. இன்று நிறைய பணம் செய்தவர்கள் பெரும்பாலும் இந்த பார்முலாவைப் பற்றி நன்கு அறிந்தவர்களே.

4. முதலீட்டில் தனி மனித ஒழுக்கம் (SELF DISCIPLINE)

முதலீட்டில் வெற்றி பெறுவதற்குத் தனி மனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது. எந்த ஒரு ஒழுக்கமும் கடைபிடிப்பது என்பது கடினம்; ஆனால் இங்கு நான் முன்பே சொன்ன மாதிரி சேமிப்பது போக மீதமுள்ளதை செலவழித்தால் இந்த ஒழுக்கத்தை எளிதாகக் கடைபிடிக்க முடியும். எந்த ஒன்றை நாம் செய்தாலும் அதில் என்ன பயன் என்று தெரிந்த பின்பே அதைச் செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப் போம். ஒருவர் கூட்டு வட்டியின் பலனை உணர்ந்தால் இந்த முதலீடு ஒழுக்கம் தானாகவே வந்துவிடும்.

5. கடன் வாங்கி முதலீடு

நாம் வாங்கக்கூடிய கடன் பாது காப்பான வட்டி விகிதத்தைவிட எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும். எந்த முதலீடும் குறுகிய கால அடிப்படையில் பலன் தருவது கடினம். அப்படி இருக்கும்போது வட்டியையும் கட்டிக்கொண்டு காத்திருப்பது என்பது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது. சேமிப்பு போக செலவு என்று ஆரம்பத்திலேயே கடைபிடிப்பவர் கள் இந்தக் கடனில் சிக்கிக் கொள் வதில்லை. மேலும் கடன் இருந் தால் நாம் நிம்மதியாக உறங்க முடியாது. அது ஒருவருடைய உடல் மற்றும் மனதைப்பெரிய அளவு பாதிக்கும்.

சாராம்சம்:

இந்தியர்களுக்கு உள்ள ஒரு மிகப்பெரிய சாதக அம்சம் என்னவெனில் பெரிதாகக் கடன் வாங்கும் பழக்கம் இல்லாதது. மேலும் பிற நாடுகளில் உள்ளதுபோல ஒருவுடைய தகுதிக்கு மீறி இந்தியாவில் பெரும்பாலும் கடன் தருவதுமில்லை. மற்றொரு உதாரணம் நம்முடைய வைப்பு நிதியில் உள்ள பணத்தைப் பார்த்தாலே நமக்கு சேமிக்கும் குணம் இருப்பது தெரிகிறது.

நமக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் அவ்வாறு சேமிக்கும் பணத்தை எந்த அளவுக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு ஒதுக்குவது என்பதே. நம்முடைய இலக்குகளை உணர்ந்தால் அதை எளிதாகப் பிரித்துக் கொள்ளலாம். பிறகு மேலே சொன்ன சிலவற்றைக் கடைபிடித்தாலே நாம் நிறைய பணம் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக்கிக் கொள்ள முடியும். ஏனெனில் மேலே சொன்ன ஐந்தில் குறைந்தது இரண்டு நம்முடைய ரத்தத்திலேயே உள்ளது. இவையாவற்றிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினாலே போதும். இது நம்முடைய வாழ்க்கை, நம் கையில்தான் உள்ளது.



padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x