Published : 30 Aug 2022 09:48 AM
Last Updated : 30 Aug 2022 09:48 AM

உலகின் 3வது பெரும் பணக்காரர் கவுதம் அதானி: ப்ளூம்பெர்க் பட்டியலில் இடம்பெற்ற முதல் ஆசியர்

கவுதம் அதானி | கோப்புப் படம்

நியூயார்க்: உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆனார் கவுதம் அதானி. ப்ளூம்பெர்க் பில்லினர் பட்டியல் வெளியானது அதில் இந்தியாவின் கவுதம் அதானி மூன்றாம் இடத்தில் உள்ளார். இதன்மூலம் இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் இடம்பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையையும் அதானி பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், 2வது இடத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் ,137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி பிரான்ஸ் நாட்டின் லூயி வுய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இதுவரை ஆசியப் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, ஜாக் மா கூட இடம் பிடித்ததில்லை.

60 வயதாகும் கவுதம் அதானி நிலக்கரிச் சுரங்கம், சிமென்ட், மின்சாரம், துறைமுகங்கள், விமானநிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

தனது தொழில்களில் அபரிமித வளர்ச்சி கண்டுவௌம் அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி அதானி 4வது இடத்திற்கு வந்தார்.

ஆனால், அதற்கு பில் கேட்ஸ் தனது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலம் 20 பில்லியன் டாலர் பணத்தை நன்கொடையாக மாற்றினார். ஏற்கெனவே உலகின் பெரும் பணக்காரராக இருந்த வாரன் பஃபட் 35 பில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி ப்ளூம்பெர்க் பில்லினர் பட்டியலில் பில் கேட்ஸ் 5வது இடத்திலும் வாரன் பஃபட் 6வது இடத்திலும் உள்ளனர்.

சமீபகாலமாக, அதானியும் தனது ஈகை தொண்டை அதிகரித்துள்ளார். தனது 60வது பிறந்தநாளை ஒட்டி கடந்த ஜூன் மாதம் கவுதம் அதானி 7.7 பில்லியன் டாலரை சமூக நலத்திட்டங்களுக்காக கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x