Published : 30 Aug 2022 01:38 AM
Last Updated : 30 Aug 2022 01:38 AM
புதுடெல்லி: ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விலையுள்ள சீன போன் விற்பனையை தடை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன மொபைல் போன்கள் குறிப்பாக ஸியோமி கார்ப் குறைந்த விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சியுள்ளது. உலக மொபைல் சந்தையில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. இந்தியச் சந்தை தான் ஸியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்களுக்கு இந்தத் தடை அமலுக்கு வந்தால் அது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஸியோமி, ஆப்போ, விவோ போன்ற செல்போன் விற்பனை நிறுவனங்களின் நிதி மேலாண்மையை கண்காணிப்பு வளையத்திற்குள் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ZTE கார்ப், ஹுவேய் டெக்னாலஜிஸ் கோ மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கெடுபிடி விதித்தது.
இப்போது, ரூ.12 ஆயிரத்துக்கும் கீழ் விலையுள்ள சீன போன் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சில தினங்கள் முன்தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அப்படி, எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதிப்படுத்தியுள்ளார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான இவர், "நாட்டின் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பில் இந்திய நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன. எனவே, வெளிநாட்டு பிராண்டுகளை மட்டும் விலக்கிவைப்பதில் அர்த்தம் இல்லை. சில சீன பிராண்டுகளிடம் உள்ள ஒரே பிரச்சினை, அவற்றின் விநியோகச் சங்கிலி இந்தியாவில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே. தவிர, ரூ. 12,000க்கும் குறைவான மொபைல் போன்களை தடை செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "இந்தியாவில், உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தற்போது 76 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இவற்றை, 2025-26 ஆம் ஆண்டிற்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதியை அடைய வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கில், இந்திய பிராண்டுகளுக்கு முக்கியவத்துவம் கொடுக்க உள்ளோம். என்றாலும், இதன் நோக்கம் வெளிநாட்டு சப்ளையர்கள் அல்லது வெளிநாட்டு பிராண்டுகளை விலக்குவது பற்றியது அல்ல. இந்திய பிராண்டுகளை உருவாக்குவது இந்திய அரசாங்கத்தின் கட்டாய கடமை என்று நாங்கள் நம்புகிறோம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT