Published : 29 Aug 2022 10:50 AM
Last Updated : 29 Aug 2022 10:50 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளது. இன்று காலை அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தக தொடக்கத்திலேயே இந்திய ரூபாயின் மதிப்பு 80.15 என்றளவில் சரிந்தது. இது நேற்றைய மதிப்பைவிட 31 பைசா மேலும் சரிந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. தற்போது இந்தியா ரூபாயின் மதிப்பு 80.11 என்றளவில் நிலை கொண்டுள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கத்தை 2% ஆக கட்டுப்படுத்த அந்நாட்டு ஃபெடரல் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவுக்கு குறைந்துள்ளதாக ஃபின்ரெக்ஸ் ட்ரெஸரி அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் கருவூலத் தலைவர் அனில் குமார் பன்சாலி கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள், ரஷ்யா உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. ஏற்கெனவே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி கடுமையாக உயர்த்தியுள்ள நிலையில், மீண்டும் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்படலாம் என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளின் எதிரொலியாகவே இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80.11 என்றளவில் சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x