Published : 01 Jun 2014 12:58 PM
Last Updated : 01 Jun 2014 12:58 PM
பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் கணிசமாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர். காந்தி தெரிவித்தார். மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
வங்கிகளின் செயல்பாடுகள் சந்தையில் நிலவும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் சரியான வழிமுறையாகும். இதன் மூலம் வங்கிகள் வாராக் கடன் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதோடு, வருவாய் தராத சொத்துகளை முடக்குவதிலும் கவனம் செலுத்தாது என்று சுட்டிக் காட்டினார். வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன் குறித்து அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதம் மற்றும் சந்தையில் நிலவும் வட்டி விகிதம் ஆகியவற்றை கணக்கிட்டு அதை ஈடுகட்டும் வகையில் இருக்கவேண்டும். அவ்விதம் இல்லாமல் போனபோதுதான் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கக் காரணமாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன் அளவு அவை வழங்கிய கடன் தொகையில் 4.4 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதத் துடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கான முழுமையான வாராக் கடன் அளவு இன்னமும் வரவில்லை என்று குறிப்பிட்டார். இப்போதைய பொருளாதார சூழலில் வாராக் கடன் அளவு 4.4 சதவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்று பலர் கூறினாலும், வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் சுமை டிசம்பர் மாதத்தில் 10.13 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டதாக காந்தி கூறினார்.
இவ்விதம் வங்கிகளின் வாராக் கடன் அளவு உயர்ந்திருந்தது ரிசர்வ் வங்கிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
வாராக் கடன் அதிகரித்தது ஏன்?
பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் அளவு உயர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிலவிய பொருளாதார தேக்க நிலை, அரசின் கொள்கையில் அடிக்கடி மாற்றம், பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம், நிறுவனங்கள் பெருமளவில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது உள்ளிட்டவை காரணமாகக் கூறப்படுகின்றன.
இருப்பினும் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பு குறுகிய கால நிகழ்வாகும். கடன் வழங்கியது மற்றும் அவற்றை வசூலிப்பதில் நிலவிய பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். இவற்றோடு பொருளாதார தேக்க நிலையும் சேர்ந்து கொண்டதால் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரித்ததாக காந்தி குறிப்பிட்டார்.மேலும் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் உரிய கவனம் செலுத்தாமை, கடன் வழங்குவதில் உரிய கண்காணிப்பு இல்லாதது ஆகியன வங்கிகளின் கடன் வசூலிக்கும் திறனை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT