Published : 18 Oct 2016 10:47 AM
Last Updated : 18 Oct 2016 10:47 AM
வேலைநேரங்களை நாம் செலவழிக்கும் விதம், நம் பொருளாதார வசதிகளைத் தீர்மானிக்கும்; ஓய்வுநேரங்களைச் செலவழிக்கும் விதம், நாம் உயர்ந்தவரா, தாழ்ந்தவரா என்பதை முடிவுசெய்யும்.
- ஜார்ஜ் ஈஸ்ட்மேன்
2016 உங்கள் நண்பர் திருமணம். குட்டிக் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவர்கள் வரை எல்லோர் கைகளிலும், கேமிராக்கள், செல்போன்கள். போட்டோ கிளிக்குகிறார்கள். சில விநாடிகளில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.
1866 நண்பர் திருமணம். ஊரில் கேமிரா இருக்கும் ஒரே ஆள் போட்டோ ஸ்டுடியோ நாகராஜ்தான். அவருக்கு எல்லோரும் காத்திருக்கிறார்கள். வருகிறார். கையில் கேமிரா, முக்காலி ஸ்டான்ட். மணமக்களுக்கு முன்னால் ஸ்டான்டை நிறுத்தி, கேமிராவை பொருத்துகிறார். கறுப்புத் துணியால் மூடுகிறார். தன் முகத்தைத் துணிக்குள் நுழைக்கிறார். “ஸ்மைல் ப்ளீஸ்” என்று மணமக்களை போஸ் கொடுக்கச் சொல்கிறார். “போட்டோ எப்போ கிடைக்கும் சார்?” என்று நாகராஜிடம் கேட்கிறார்கள். “டார்க் ரூமிலே பிளேட்டை கழுவணும். பிரிண்ட் எடுக்கணும். மூணு, நாலு நாள் ஆகும்.”
1866 க்கும், 2016 க்கும் நடுவே 150 ஆண்டுகள். வரலாற்று சமுத்திரத்தில் மிகச்சிறிய நீர்த்துளி. ஆனால், போட்டோகிராஃபி சரித்திரத்தில் மாபெரும் சகாப்தம்.
காரணகர்த்தா ஒரே ஒரு மனிதர் ஈஸ்ட்மேன் கோடக் கம்பெனி தொடங்கிய ஜார்ஜ் ஈஸ்ட்மேன்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் அருகே இருந்த வாட்டர்வில் என்னும் கிராமத்தில் வாஷிங்டன் ஈஸ்ட்மேன், மனைவி மரியா தம்பதிகள் வசித்தார்கள். முதல் இரண்டு பெண் குழந்தைகள். மூன்றாவது வரவு, 1854 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மகன் ஜார்ஜ் பிறந்தான். அப்பா அருகிலிருந்த ராச்செஸ்டர் நகரத்தில் அக்கவுன்டிங், கையெழுத்து முன்னேற்றம் ஆகியவற்றில் பயிற்சி தரும் பள்ளி நடத்தினார். ராச்செஸ்டரில் அதிக நாட்கள் செலவிட்டார். மூன்று குழந்தைகளையும் மரியாதான் வளர்த்தார். ஜார்ஜ் மனதில் அம்மா பதித்த மந்திரங்கள், “சிக்கனமாக வாழவேண்டும், எந்தக் காரியத்தைச் செய்தாலும், அது சில்லறை வேலையாக இருந்தாலும், அதில் முழுத் திறமையைக் காட்டவேண்டும்.” ஜார்ஜுக்கு அம்மாவிடம் இருந்தது பாசம் மட்டுமல்ல, பயம் கலந்த மரியாதை, பக்தி.
அப்பாவின் பள்ளி வருமானம் போதவில்லை. அம்மா வீட்டில் தோட்டம் போட்டுக் காய்கறிகள், பழங்கள், ரோஜாப்பூக்கள் ஆகியவற்றை அண்டை அயலாருக்கு விற்பனை செய்தார். ஜார்ஜின் எட்டாவது வயதில் அப்பா மரணமடைந்தார். அவருக்கு ராச்செஸ்டரில் பள்ளி நடத்திய கட்டடம் இருந்தது. ஆகவே, மரியா குடும்பத்தோடு ராச்செஸ்டருக்குப் போனார். வீட்டை மேன்ஷனாக்கினார். அறைகளைப் பலருக்கு வாடகைக்கு விட்டார். சின்னப் பையனாக இருக்கும்போதே, பொறுப்போடு ஜார்ஜ் அம்மாவுக்கு உதவிகள் செய்வான்.
ஜார்ஜுக்கு பதினைந்து வயது. குடும்ப வறுமையால் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். உள்ளூர் இன்ஷூரன்ஸ் கம்பெனி மேனேஜரிடம் அம்மா வேண்டுகோள் விடுத்தார். பியூன் வேலை தந்தார்கள். மாதம் 12 டாலர் சம்பளம். அடுத்த ஆறு ஆண்டுகளில் மாதம் 1000 டாலர் சம்பளத்தில் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். ஜார்ஜின் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு ஆகியவற்றுக்கு கிடைத்த அங்கீகாரம் அது.
ஜார்ஜ்க்கு அப்போது 21 வயதுதான் ஆகியிருந்தது. அவன் வயது இளைஞர்கள் மாதம் 300 / 400 டாலர்கள் வேலையில் இருந்தபோது, ஜார்ஜ் கையில் 1000 டாலர்கள். அம்மாவின் கண்டிப்பான வளர்ப்பால், அவனிடம் கெட்ட பழக்கங்களே கிடையாது. இசைக் கச்சேரிகள், நாடகங்கள் பார்க்கப்போவான். அன்றைய கால கட்டத்தில், போட்டோகிராபி அதிகமான நேரமும், பணமும் செலவழிக்க வேண்டிய ஹாபியாக இருந்தது. ஜார்ஜிடம் இரண்டுமே இருந்தனவே? பொழுதுபோக்கைத் தொடங்கினான். எதையும் அரைகுறையாகச் செய்யும் பழக்கம் அவனிடம் கிடையாது. ராச்செஸ்டர் நகரத்தில் இருந்த இரு பிரபல போட்டோகிராபர்களிடம் பயிற்சி பெற்றான். கேமிராவும், பிற உபகரணங்களும் வாங்கினான். வீட்டில் இருந்த ஒரு அறையை “இருட்டறை” ஆக்கினான்.
ஒருநாள். நண்பர்களோடு சுற்றுப்பயணம் போகவேண்டியிருந்தது. பயணத்தைப் போட்டோ எடுக்க விரும்பினான். கேமிரா, முக்காலி ஸ்டான்ட், கறுப்புத் துணி, கெமிக்கல்கள் என ஏகப்பட்ட சாமான்களை சுமந்துகொண்டுபோக அவனுக்கு எரிச்சலாக இருந்தது. போட்டோகிராபியை எப்படியாவது எளிமையானதாக்க வேண்டும் என்று முடிவு செய்தான். இதற்குப் பிறகு, வெறி பிடித்தவன்போல், வங்கி வேலை முடிந்து வந்தவுடன் இருட்டறையில் அடைக்கலம். அவன் அம்மா சொன்னார், “போட்டோகிராபி வேலையை முடித்துவிட்டு ராத்திரி எப்போது சாப்பிடவருவானோ? பல நாட்கள் அசதியில், உடையைக்கூட மாற்றாமல் அடுக்களையில் வெறும் தரையில் தூங்கிவிடுவான்.”
ஜார்ஜ் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம். வங்கியில் அவனுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. திறமைக்கு மதிப்புத்தராத இடத்தில் பணிதொடர அவனுக்கு விருப்பமில்லை. வேலையை ராஜினாமா செய்தான். போட்டோகிராபிக்கான தகடுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்தான். ஓரளவு வருமானம் வந்தது. சிரம ஜீவிதம்தான். ஆனால், போட்டோகிராபி அவனுக்கு அற்புத மனநிறைவு தந்தது. இனிமேல் வாழ்க்கை போட்டாகிராபிதான் என்று முடிவெடுத்தான்.
எந்தத்துறையில் ஜெயிக்கவேண்டு மானாலும், திறமைசாலிகள் துணை நிற்கவேண்டும் என்று ஜார்ஜ் நினைப் பவன். ஆகவே, 1884 இல், தன் 34 ஆம் வயதில், வில்லியம் வாக்கர் என்னும் போட்டோகிராபி விஞ்ஞானியை வேலைக்கு அமர்த்திக்கொண்டான். கேமிராவில் தகடுகளுக்குப் பதிலாகக் காகிதத்தை உபயோகிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்கள். இந்த அடிப்படையில், 1887 இல், காகிதம் பயன்படுத்தும் கேமிராவை அறிமுகம் செய்தார்கள். நல்ல வரவேற்பு. ஆனால், ஜார்ஜ் திருப்தியடையவில்லை. அவரும், வில்லியம் வாக்கரும் தொடர்ந்து வெறியோடு உழைத்தார்கள். கிடைத்தது வெற்றி. 1888 இல், போட்டோ பிலிமையும், அதைப் பயன்படுத்தும் கேமிராவும் கண்டுபிடித்தார்கள். மனித வரலாற்றில் மகத்தான திருப்புமுனை.
“நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் வெறுமே பட்டனை அழுத்துவதுதான். மீதி எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” (You press the button we do the rest) என்னும் ஜார்ஜே எழுதிய விளம்பர வாசகம் போட்டோ எடுக்க ஆசைப்பட்ட அத்தனைபேரின் தேசியகீதமானது. 1900 த்தில், மலிவுவிலைக் கேமிரா அறிமுகம் செய்தார். விலை ஒரே ஒரு டாலர்! அடிமட்ட மக்களின் கைகளிலும் போட்டோகிராபியைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். ஈஸ்ட்மேன் கோடக் நிறுவனம் வெற்றியின் உச்சம் தொட்டது. ஜார்ஜ் அமெரிக்காவின் ஆறாவது பெரும் கோடீஸ்வரரானார்.
ஆச்சரியமாக, பணம் குவிப்பது ஜார்ஜின் லட்சியமாகவே இருக்க வில்லை. அவர் குறிக்கோள், “தன் அனுபவங்களை நினைவிலிருந்து அழியாமல் பதிவுசெய்து, ஓய்வுநேரங் களில் அசைபோட்டு அனுபவிக்கும் பரம ஆனந்தத்தைச் சாமானியனுக்கும் போட்டோகிராபி தரவேண்டும்.” இந்தப் பயணத்தில் கோடிகள் குவிந்தது அவருக்கே, அதிர்ச்சியான ஆச்சரியம். தன் செல்வத்தை, நல்ல ஊதியம், காப்பீட்டு உதவிகள், கம்பெனிப் பங்குகள் என ஊழியர்களோடு கணிசமாகப் பகிர்ந்துகொண்டார். “உலக முன்னேற்றம் கல்வியின் அடிப்படையில் மட்டுமே இருக்கிறது” என்று நம்பினார். ராச்செஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஹாம்ப்ட்டன் டஸ்க்கீ இன்ஸ்டிடியூட் போன்ற கல்வி நிலையங்களுக்கு அவர் தந்த மொத்த அன்பளிப்பு 75 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம்.
இத்தனை சாதனைகள் நிறைந்த ஜார்ஜின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது. தன் அம்மாவிடம் அவர் வைத்திருந்த பாசம் வெறித்தனமானது. அவருடைய 67 ஆம் வயதுவரை அம்மா உயிர் வாழ்ந்தார். தன் அன்பை இன்னொரு பெண்ணோடு பகிர்ந்துகொள்ள விரும்பாத ஜார்ஜ் திருமணமே செய்துகொள்ளவில்லை. 77 ஆம் வயதில், அவர் முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட்டது. வீல்சேரில் வாழும் கட்டாயம். தனிமை வாட்டியது. மார்ச் 14, 1932. வயது 82. ஜார்ஜ் தன் கைத்துப்பாக்கியை எடுத்தார். நெற்றிப் பொட்டில் பொருத்திக்கொண்டார். “டுமீல்.” வெடித்தது துப்பாக்கி. முடிந்தது ஒரு மாபெரும் வாழ்க்கை. அவர் விட்டுச் சென்ற பிரிவுக் கடிதம், “என் வேலை முடிந்துவிட்டது. (மரணத்துக்காக) இனியும் ஏன் காத்திருக்கவேண்டும்?
தொடர்புக்கு: slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT