Published : 24 Aug 2022 05:38 PM
Last Updated : 24 Aug 2022 05:38 PM
புதுடெல்லி: சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் டவர்களை விற்பனை செய்யும் பணிகளை அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மானிடைசேஷன் பைப்லைனின் (NMP) ஒரு பகுதியாக இந்த விற்பனையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 13,567 டவர்கள் மற்றும் எம்டிஎன்எல்-இன் 1,350 டவர்களையும் வரும் 2025-க்குள் பகுதி பகுதியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலம் ரூ.4,000 கோடியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் இயங்கி வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று பிஎஸ்என்எல். இது அரசு நிறுவனமாகும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தரவுகளின் படி நாட்டின் ஒட்டுமொத்த பயனர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனம் தன்வசம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அண்மையில் மத்திய அமைச்சரவை ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு தொகுப்பை அறிவித்திருந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் அதிவிரைவில் 5ஜி சேவை வெளியாக உள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதற்கான பணிகளை கவனித்து வருகின்றன. இந்நிலையில், பிஎஸ்என்எல் டவர்களை விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.
இருந்தாலும் இப்போது விற்பனை செய்யப்பட உள்ள டவர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்துடன் இணை இருப்பிட ஏற்பாடுகளை (Co-Location Arrangements) கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT