Published : 22 Aug 2022 06:29 PM
Last Updated : 22 Aug 2022 06:29 PM

பிஎம் ஸ்வநிதி திட்டம்: தமிழக சாலையோர வியாபாரிகளுக்கு இதுவரை ரூ.198 கோடி கடன்

சென்னை: பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இதுவரை ரூ.198 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதல் அலை பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை வரை கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு பல மாநில அரசுகள் நிவாரணத் தொகை வழங்கின.

இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ‘ஸ்வநிதி' திட்டத்தில் ரூ.10,000 சிறப்பு கடன் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்த கடனை மாதத் தவணையாக, ஓராண்டிற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். முறையாக கடனை திருப்பி செலுத்தினால் ஏழு சதவீத வட்டி மானியம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் கடன் பெற சாலையோர வியாபாரிகள் pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை அளித்து தகவல்களை பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கான கடன் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தற்போது இந்த திட்டத்திற்கு சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தினருக்கும் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் 2020-21 ம் ஆண்டில் 87,716 வியாபாரிகளுக்கு ரூ.87 கோடி, 2021-22 ம் ஆண்டில் 73,983 வியாபாரிகளுக்கு ரூ.78 கோடி, 2022-23ம் ஆண்டில் 8,322 வியாபாரிகளுக்கு ரூ.33 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஜூலை மாதம் வரை தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு இதுவரை ரூ.198 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x