Published : 21 Aug 2022 03:21 PM
Last Updated : 21 Aug 2022 03:21 PM

'இலவசங்களுக்கும் ஒரு விலை இருக்கு; வாக்காளர்களுக்கு அதன் தாக்கம் தெரியட்டும்' - ரிசர்வ் வங்கி உறுப்பினர்

இலவசங்கள் எல்லாம் எப்போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி கொடுத்தால் அவர்கள் தான் அதற்கான நிதி ஆதாரம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அசிமா கோயல் கூறியதாவது:

இலவசங்கள் எல்லாம் எப்போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் பற்றி வாக்குறுதி கொடுத்தால் அவர்கள் தான் அதற்கான நிதி ஆதாரம் பற்றி வாக்காளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். மாறி மாறி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இலவசங்கள் உண்மயில் உங்களுக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் அத்தகைய மானியங்கள் உற்பத்தியை பாதித்து மறைமுக செலவை அதிகரிக்கிறது. பஞ்சாபில் இலவசம் மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்ததுதான் மிச்சம். இலவசங்களுக்கு செலவிடுவதால் மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், காற்று, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடும்.

அதனால் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும்போது அதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பதையும் வாக்காளர்களுக்கு விவரிக்க வேண்டும். இதனால் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பிரதமர் கண்டனம்: அண்மையில் பானிப்பட்டில் 2ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் மோடி, "அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இலவசங்களால் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும். இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. இதற்கு கடின உழைப்புடன் சரியான கொள்கை மற்றும் பெருமளவிலான முதலீடுகளும் தேவை என்று பேசியிருந்தார்.

சமீப காலமாகவே தேர்தலில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அறிவிப்பது பற்றி விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயலும் இலவசங்கள் ஆபத்து என்று பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x