Published : 21 Aug 2022 09:10 AM
Last Updated : 21 Aug 2022 09:10 AM
கிராம மக்களுக்கு எளிதாக வங்கி சேவைகளை வழங்கும் வகையில் அஞ்சல் துறையில், ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்’ (IPPB) திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
பணத்தை சேமிக்க விரும்புவோர் இத்திட்டம் மூலமாக அருகில் உள்ள தபால்காரருக்கு தகவல் தெரிவித்தால், அவரே வீடு தேடி வந்து, புதிய அஞ்சலக கணக்கு ஆரம்பித்து கொடுப்பார். இதுதான் இத்திட்டத்தின் சிறப்பம்சம். நாடு முழுவதும் 650 கிளைகள், 3,250 சேவை மையங்களை கொண்டு தொடங்கப்பட்ட இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியை தாண்டிவிட்டது.
இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துடன் (Tata AIG General Insurance) இணைந்து, ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சாமானிய மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், அஞ்சலகங்கள் மூலம் மிக குறைந்த பிரீமியத்தில் விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது. இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இதை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு வெறும் ரூ.399பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ளவிபத்து காப்பீட்டை பெறலாம்.
18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள, முகவரி சான்று நகல் என எந்தவிதமான காகிதப் பயன்பாடும் இல்லாமல், உங்கள் பகுதி தபால்காரர் கொண்டுவரும் ஸ்மார்ட்போன், விரல் ரேகை மூலம், 5 நிமிடங்களில் முற்றிலும் மின்னணு (டிஜிட்டல்) முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் மதிப்பிலான இந்த காப்பீட்டின் மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு இழப்பீடு பெறலாம்.
விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள், உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையிலும், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையிலும், விபத்தால் உயிரிழப்பு, ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரது குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகையாக ரூ.1,000 வீதம் அதிகபட்சம் 9 நாட்களுக்கு காப்பீட்டு தொகை (க்ளெய்ம்) பெறலாம்.
விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்கச் செல்லும் குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரையிலும், விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், இறுதிச்சடங்குகள் செய்ய ரூ.5 ஆயிரம் வரையிலும் க்ளெய்ம் பெறலாம்.
இந்த விபத்து காப்பீட்டை எடுப்பதன்மூலம், எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் உடல்நல நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தை பாதுகாக்க முடியும். பொதுமக்கள் தபால்காரர் மூலமாக மிக எளிதான முறையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT