Published : 06 Oct 2016 08:12 AM
Last Updated : 06 Oct 2016 08:12 AM
காவிரி பிரச்சினையால் சிவகாசி பட்டாசுகள் கர்நாடகம் வழியாகப் போவதற்குப் பதிலாக ஆந்திரா வழியாக 400 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு செல்வதால், லாரி உரிமை யாளர்கள், வியாபாரிகளுக்கும் பட்டாசு தேக்கத்தால் உற்பத்தி யாளர்களுக்கும் சுமார் ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் இருந்து ஏறக் குறைய இந்தியா முழுவதும் லாரி கள் மூலம் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழ்நாடு, கர்நாடகா, மஹா ராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி ஆகிய 8 மாநிலங்களில் 75 சதவீத பட்டாசுகள் விற்பனையாகின்றன.
சிவகாசியில் இருந்து மதுரை, ஓசூர், அத்திப்பள்ளி வாகன சோதனைச் சாவடி (கர்நாடகம்), மஹாராஷ்டிரா, சோலாப்பூர் வழியாக வடமாநிலங்களுக்கு பட்டாசுகள் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், தற்போது காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகம் வழியே லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி பட்டாசு லாரி போக்குவரத்து சங்கச் செயலாளர் கே.முத்துராஜூ நமது நிருபரிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகா, மஹாராஷ்டிரம் உள் ளிட்ட 7 மாநிலங்களுக்கு பட்டாசுகள் ஏற்றிச் சென்ற 600 லாரிகள் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
காவிரி பிரச்சினை இப்போ தைக்கு முடியப் போவதில்லை என்பதால், லாரிகள் ஆந்திரம் வழியாக 400 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்கின்றன. இத னால் ஒரு லாரிக்கு ரூ.30,000 வரை வீதம் ரூ.1 கோடியே 80 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் பட்டாசுகள் போய்ச் சேராததால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் முத்துராஜூ.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்பாமா) மக்கள் தொடர்பு பிரிவுத் தலைவர் பி.கணேசன் கூறியதாவது:
மைசூரில் இருந்து பட்டாசு மூலப்பொருளான பொட்டாசியம் நைட்ரேட் எடுத்து வர ஒரு லாரி லோடுக்கு அதிகபட்சம் ரூ.13 ஆயிரத்து 500 வரை செலவானது. காவிரி பிரச்சினை காரணமாக இப்போது ஒரு லோடுக்கான செலவு ரூ.27 ஆயிரம். இதனால் பட்டாசு உற்பத்திச் செலவு அதிகரித் துள்ளது. தீபாவளி நெருங்குவதால் திடீரென விலையையும் உயர்த்த முடியவில்லை. இதனால் நஷ்டத்துக்கு தொழில் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
லாரிகள் ஆந்திரா வழியாக சுற்றிக் கொண்டு செல்வதால் குஜராத், டெல்லி போன்ற இடங் களுக்கு பட்டாசு அனுப்புவதற்கான வாடகை ஒரு லோடுக்கு ரூ.50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பட்டாசு விலை அதிகரித்து மக்கள் சிரமப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பட்டாசு இருப்பு வைக்கும் வசதி இல்லை என்பதால், தீபாவளிக்கு ஒருமாதத்துக்கு முன்னர்தான் வடமாநில மொத்த வியாபாரிகள் சிவகாசி வந்து பட்டாசு வாங்கிச் செல்வார்கள். காவிரி பிரச்சினையால் அவர்களும் வந்து வாங்கிச் செல்ல முடியாததால், சிவகாசியில் 25 சதவீத பட்டாசுகள் தேங்கியுள்ளன என்றார் கணேசன்.
மொத்தத்தில், காவிரி பிரச்சினையால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 1,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள், பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT