Published : 06 Aug 2022 09:27 PM
Last Updated : 06 Aug 2022 09:27 PM
புதுடெல்லி: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போதைய சூழலில் உலகலாவிய காரணிகளை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம்" என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, "அரசாங்கம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. தனியார் துறையில் அவை கீழ்மட்ட அளவிலும், பகுதிநேர அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே உருவாக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் முதன்மையானது, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை. சிஎம்ஐஇ (சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியான் எக்கானாமி) தகவல்படி, இந்தியாவின் வேலைவாய்ப்பு இல்லாத நிலை 7-8 சதவீதமாக இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு இணையாக வேலை வாய்ப்பு வளர்ச்சி இல்லாததே இதற்கு காரணம்.
உலகின் அதிகமான இளைஞர் சக்தியை கொண்டுள்ள இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றால் உருவாகப்போகும் சமூக எதிர்வினையை நம்மால் எளிதாக கற்பனை செய்யமுடியும். உண்மையில் இந்தியாவில் வேலை செய்யும் திறன்கொண்டவர்களில் 40 சதவீதம் இளைஞர்கள் மட்டுமே வேலையில் இருக்கிறாகள், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது.
அரசாங்கம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தன்னாலான பங்கை செய்கிறது. வரும் 2023ம் ஆண்டுக்குள், 1 மில்லியன் மக்களை அரசுவேலைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது. நம்மிடம், வேலைத்திறன் கொண்ட 900 மில்லயன் பேர் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாம் நிறைய விஷயங்களைச் செய்யமுடியும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் கீழ்மட்ட நிலையில், உபர் ஓட்டுநர், ஜொமாட்டோ டெலிவரி செய்பவர் போன்ற அளவில் கிக் எக்கனாமி எனப்படும் பகுதிநேர, ஒப்பந்த அடிப்படையிலுமே உருவாக்கப்படுகிறது.
இவை போதுமானவையாக இருக்காது. உலகளாவிய காரணிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். குறிப்பாக உற்பத்தித் துறையில் இதனை நாம் செய்யவேண்டும்.
சிறுகுறு தொழில்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் உள்ளூர் போக்குகளின் சிறப்புகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்காவில் 90 சதவீத புதிய தொழில்கள் "மாம் அண்ட் பாப்" எனச் சொல்லப்படும் சிறுதொழில்களே. குறைவான முதலீடுகளைக் கொண்டுள்ள அவைகள் அமெரிக்காவின் 67 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவிலும் வளர்ச்சிக்கான முதுகெலும்பாக சிறுகுறு தொழில்களால் விளங்க முடியும். எதிர்காலத்தின் நம்பிக்கை வைத்து முதலீகளை அதிகப்படுத்த வேண்டும்.
சர்வதேச விநியோக சங்கிலியில் சீனாவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. 60 சதவீத நிறுவனங்கள், 82 சதவீத உற்பத்தியாளர்கள், தற்போதைய நிலையில் ஆள்பற்றாக்குறை, பொருட்களை பெற முடியாமை போன்ற காரணங்களால் தங்களின் உற்பத்தி குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளன. இதனால் விநியோக சங்கிலியில் ஒரு மாற்றம் நிகழவாய்ப்பு உள்ளது. இந்த வளங்கள் பரவலாக்கலில் பயனடையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கலாம்.
சீனாவின் வீழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சி. விநியோக சங்கிலியின் புதிய வர்த்தகராக இந்தியா மாற முடியும். அந்த நாளை நாம் உருவாக்குவோம்” என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT