Published : 25 Jul 2022 09:00 AM
Last Updated : 25 Jul 2022 09:00 AM
குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆகியவை சார்பில் ‘முதலீடும் முன்னேற்றமும்' என்ற தலைப்பில் முதலீட்டாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, "சிக்கனம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை எங்கள் நாளிதழ் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எங்கள் நாளிதழின் வணிகவீதி பக்கத்தில் நல்ல முதலீடு என்பது என்ன, சிக்கனமாக இருப்பது எப்படி, உலகளவில் அரசுகளின் கொள்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, அது, இந்த சமூகம், வியாபாரத்தை எப்படி பாதிக்கும்,ஒரு நாட்டின் பண மதிப்பின் ஏற்ற, இறக்கங்கள், நாடுகளிடையேயான உறவு எப்படி சாதாரண மனிதனை பாதிக்கிறது என்பது போன்றகட்டுரைகளை வாசகர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில்வெளியிட்டு வருகிறோம்.
தற்போது, எதிர்காலத்தின்மீது நிச்சயமற்ற தன்மை உருவாகி உள்ளது. அந்த நிச்சயமற்ற தன்மையை முதலீடுகள் மூலம் எதிர்கொள்ளவும், எதிர்காலத்தைப் பற்றிய நல்ல நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது"என்றார்.
கவனிக்கவேண்டியவை
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அண்ணாமலை கேப்பிடல் சர்வீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.அண்ணாமலை பேசியதாவது: ஒரே நாளில் யாரும் பணக்காரர் ஆகிவிட முடியாது. சிறுக, சிறுக சேமித்து, அது வளர வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகுதான் பெரிய பணத்தை நாம் சம்பாதிக்க முடியும். நிறையபேர் முதலீடு செய்வார்கள். ஆனால், ஏதேனும் திடீர் செலவு வரும்போது, அந்த முதலீட்டை எடுத்துக்கொள்வார்கள்.
எந்த நோக்கத்துக்காக சேமிக்கிறோம், முதலீடு செய்கிறோம் என்ற இலக்கு தேவை. அந்த இலக்கு நிறைவேறும்வரை முதலீட்டை தொடர வேண்டும். அது மிகவும் அவசியம். எந்த முதலீட்டை மேற்கொண்டாலும் அதில் உள்ள ‘ரிஸ்க்' பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்தவர்கள் செய்வதை பார்த்து நாமும் அதேபோன்று முதலீடு செய்யக்கூடாது. நாம் எவ்வளவு சேமிக்க முடியும், குடும்ப தேவைக்கு எதிர்காலத்தில் எவ்வளவு தொகை தேவை, அதை எப்படி முதலீடு செய்தால் சமாளிக்க முடியும் என ஆராய்ந்து, நமக்கேற்ற முதலீட்டை முடிவு செய்ய வேண்டும்.
முதலீடு செய்யும்போது நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், அதன் பாதுகாப்பு. இரண்டாவது, தேவைப்படும்போது அந்த பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும். மூன்றாவது, அந்த முதலீட்டின் மூலம் குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். அந்த வருமானம் மற்ற முதலீடுகளைவிட எந்த வகையில் சிறந்தது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரேவகையான முதலீட்டில் மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதில், நிரந்தர வைப்புத்தொகை, பரஸ்பர நிதி, பங்குச்சந்தை, தங்க இடிஎஃப் என பல்வேறு வகையான முதலீடுகளை செய்ய வேண்டும். தற்போதையை சூழலில் வருமானம்-சேமிப்பு=செலவு என்ற ஃபார்முலாவை பயன்படுத்த வேண்டும். கட்டாய சேமிப்புபோக எஞ்சியுள்ளவற்றை செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்ஐபி முறை முதலீடு சிறந்தது
குவாண்டம் அட்வைஸர்ஸ் நிர்வாக இயக்குநர் வி.சுப்ரமணியம், குவாண்டம் ஏஎம்சி அசோஸியேட் ஃபண்ட் மேனேஜர்ஜார்ஜ் தாமஸ் ஆகியோர் பேசும்போது, “பரஸ்பர நிதியில் (மியூச்சுவல் ஃபண்ட்) ஒட்டுமொத்தமாக ஒரு பெரும்தொகையை முதலீடு செய்வதற்குப் பதில், எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை சீராக முதலீடு செய்தால் அதிக பலன் பெறலாம். பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் பலருக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறோம் என்பதே தெரிவதில்லை.
திட்டங்களை தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். அதற்கு எப்படி முதலீடு செய்ய வேண்டும், எதில் எல்லாம் முதலீடு செய்ய வேண்டும், குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றை www.quantumamc.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்”என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT