Published : 19 Jul 2022 07:41 PM
Last Updated : 19 Jul 2022 07:41 PM
நியூ ஜெர்சி: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை முந்தியுள்ளார் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி. இதனை ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. இவரது சொத்து மதிப்பு சுமார் 114.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் தனது சொத்து 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இது ஃபோர்ப்ஸ் வலைதள பக்கத்தின் ரியல் டைம் பில்லியனர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஆசிய அளவில் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை எட்டி முகேஷ் அம்பானியை முந்தி இருந்தார் அதானி.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம், ஜெஃப் பெசோஸ் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இதில் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 230.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 200+ பில்லியன் கிளப்பில் அவர் ஒருவர் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளார். மற்ற அனைவரும் அதற்கு கீழான சொத்து மதிப்பை கொண்டுள்ளனர்.
"கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை கண்டு உலக மக்கள் ஊக்கம் இழந்துள்ளனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு வழங்க நான் திட்டமிட்டுள்ளேன். உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புகிறேன்.
துன்பங்களை போக்கி மக்கள் வாழ்வை மேம்படுத்தும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்த எனது சொத்துகளை திரும்ப தர முடிவு செய்துள்ளேன். அதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். வரும் நாட்களில் இதே நிலையில் உள்ள பலரும் இதில் இணைவார்கள் என நம்புகிறேன்" என்று பில் கேட்ஸ் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT