Published : 18 Jul 2022 12:18 PM
Last Updated : 18 Jul 2022 12:18 PM

ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமல்: விலை கூடும் பொருட்கள் எவை?

புதுடெல்லி: ஜூலை 18-ஆம் தேதியான இன்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூலை 18ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஹோட்டல் அறைகளின் வாடகை ஒரு நாளைக்கு ரூ.1000க்குள் குறைவாக இருந்தால் தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறை வாடகை (ICU தவிர்த்து) ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000க்கு மேல் ஐடிசி இல்லாத அறைக்கு 5 சதவீதம் வசூலிக்கப்படும்.

எல்இடி விளக்குகள், சாதனங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளதால் இந்த பொருட்களின் விலையும் உயரும்.

வெட்டும் கத்திகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள் கொண்ட கத்திகள், கரண்டிகள், ஃபோர்க்ஸ், லேடில்ஸ், ஸ்கிம்மர்கள், கேக்-சர்வர்கள் போன்றவை 12 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 18 சதவீத ஜிஎஸ்டி என உயர்கிறது.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் மற்றும் வரைபடங்களுக்கு இன்று முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

பேக்கேஜ் செய்யப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இதற்கு முன்பு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அது 12 சதவிகிதமாக மாறுவதால் வாடகை குறையும் வாய்ப்பு உள்ளது.

பிற எலும்பு முறிவு உபகரணங்கள், உடலின் செயற்கை பாகங்கள், குறைபாடு அல்லது இயலாமைக்கு ஈடுசெய்ய அணியும் அல்லது உடன் எடுத்துச் செல்லப்படும் அல்லது உடலில் பொருத்தப்பட்ட பிற உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது. எனவே இவற்றின் விலை குறையும்.

இதனைத் தவிர பாதுகாப்புப் படைகளுக்கு பயன்படும் பொருட்கள், தனியார் நிறுவனங்கள்/ விற்பனையாளர்களால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட பாதுகாப்புப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x