Published : 18 Jun 2014 12:23 PM
Last Updated : 18 Jun 2014 12:23 PM
தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய வரவான சோலார் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவுவதாக உள்ளது. மின் வெட்டு பிரச்சினை இருக்காது. இதனால் பயிருக்கு தடையின்றி நீர் பாய்ச்ச முடியும். 2000 விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய சோலார் பம்புசெட்டுகளை வழங்கிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சோலார் பம்புசெட் நிறுவிட ஆகும் செலவுத் தொகையில் 20 சதவீதத் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. மீதம் 80 சதவீதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின்படி, வெயில் நேரத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் வயல்களில் நிறுவப்படும். 5 எச்.பி. திறனுள்ள நீர்மூழ்கி மோட்டாரும் வழங்கப்படும்.
விவசாயிகள் ஏற்கெனவே ஆழ்துளை கிணறு அமைத்திருக்க வேண்டும். திறந்தவெளி கிணறுகள் வைத்துள்ள விவசா யிகளும் இந்தத் திட்டத்தால் பயன்பெறலாம். ஆழ்துளை கிணறுகளில் சோலார் பம்புசெட் நிறுவுவதற்கான கருவிகளின் விலை ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 950 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 750 மட்டும் செலுத்தினால் போதுமானது. மீதித் தொகையை அரசு மானியமாக வழங்கிடும்.
திறந்தவெளி கிணறுகளில் சோலார் பம்புசெட் அமைப்பதற்கு ரூ.5 லட்சத்து ஆயிரத்து 512 செலவாகும். இதில் 20 சதவீதத் தொகையான ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 512 மட்டும் விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.
ஏற்கெனவே ஆழ்துளை கிணறுகள் அல்லது திறந்தவெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள், தாங்கள்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான ஆவணங்களுடன் அருகிலுள்ள வேளாண்மைத் துறை அல்லது தோட்ட கலைத் துறை அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி சோலார் பம்புசெட் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சோலார் பம்புசெட் அமைப்பதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.
அந்த இடம் பொருத்தமானது என தெரிய வந்த பின்னர், விவசாயிகள் தங்களின் பங்குத் தொகையான 20 சதவீதத் தொகையை செலுத்திட வேண்டும். அதன் பின்னர் வேளாண்மை பொறியியல் துறையால் பணி ஆணை வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வயலில் சோலார் பம்புசெட்டை நிறுவுவார்கள்.
சோலார் பம்புசெட் மூலம் கிடைக்கும் தண்ணீரை சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசன முறையில் மட்டுமே வயல்களுக்கு பாய்ச்ச வேண்டும் என்பது கட்டாயம். இந்த நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவிட சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் அரசு மானிய உதவிகளை அளித்து வருகிறது.
“சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி 5 எச்.பி. மோட்டார் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு, நுண்ணீர் பாசன அமைப்பின் உதவியுடன் 8 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்ய முடியும்” என்கிறார் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள காஞ்சிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.பன்னீர்செல்வம். திருச்சி ரங்கம் அருகேயுள்ள கொட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏ.ராஜா, சோலார் பம்புசெட் மூலம் தான் இரண்டரை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளதாகக் கூறுகிறார்.
ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு தவிர தரை நிலைத்தொட்டி வைத்துள் ளவர்களும் தங்கள் பாசனத் துக்காக அரசின் மானிய உதவி பெற்று சோலார் பம்புசெட்டுகளை நிறுவிடலாம். சோலார் பம்புசெட் டுகளை நிறுவுவதன் மூலம் பகல்பொழுது முழுவதும் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் கிடைக்கிறது. சோலார் பம்புசெட்டு கருவிகளை நிறுவிடும் நிறுவனம் 5 ஆண்டுகள் வரை கருவிகளுக்கான பராமரிப்பு பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறது. விவசாயிகளுக்கு இ்த் திட்டம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
devadasan.v@thehidutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT