Published : 15 Jul 2022 11:02 PM
Last Updated : 15 Jul 2022 11:02 PM

அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கான 5% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

ராமநாதபுரம்: அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இவ்வரியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு அரசின் திரும்பப் பெறும் அறிவிப்பு வந்தால், போராட்டத்தை வாபஸ் பெறுவோம். இல்லையென்றால் அடுத்த போராட்டங்களுக்கு தயாராவோம். அதேபோல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும். குப்பை வரி, தொழில்வரி என வரிகளை பிரித்து போடாமல், ஒரே வரியாக லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைக்கு மேல் சாலை போடுவதால் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் சாலையிலிருந்து தாழ்வாக சென்று விடுகின்றன. இதனால் மழைக் காலங்களில் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். பல வரி விதிப்புகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வியாபாரிகள் வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் பல ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

தமிழக டிஜிபி அறிவித்துள்ளபடி, மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றன. சாமானிய வியாபாரிகள் அப்படி விற்க முடியாது. அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்" என்று விக்ரமராஜா கூறினார்.

இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் பி.ஜெகதீசன், மாவட்ட கவுரவத் தலைவர் ஜபருல்லாகான், மாவட்ட துணைத் தலைவர் ராசி போஸ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் குப்தா ஆர்.கோவிந்தராஜ், எஸ்.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி உள்ளிட்ட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x