Published : 10 Jul 2022 06:42 AM
Last Updated : 10 Jul 2022 06:42 AM
சென்னை: இந்தியாவில் பல மாநில அரசுகள் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் முனைப்புடன் ஈடுபட்டு உள்ளன. மத்திய அரசும் இதில் வேகம் காட்டுகிறது.
தொழில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம் உயர்வு... என்று பல நன்மைகள் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் சில, நியாயமான ஐயங்களும் ஆழமான அச்சங்களும் எழத்தான் செய்கின்றன. அந்நிய முதலீடு - வேலைவாய்ப்பு தொடர்பாக, தேவையான சில அடிப்படை விவரங்கள் எங்கும் யாராலும் வெளியிடப்படுவது இல்லை. இந்தியா முழுக்க இதே நிலைதான். தமிழகம் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.
உண்மையாக யாருக்குமே புரியாத ஓர் அம்சம் உண்டு - 'விகிதாச்சாரம்'!
எத்தனை ஆயிரம் கோடி முதலீட்டுக்கு எத்தனை ஆயிரம் வேலை?
1497 கோடி ரூபாய் முதலீடு - 7050 பேருக்கு வேலை. சராசரியாக, சுமார் இரண்டு கோடி ரூபாய் முதலீடு; ஒருவருக்கு வேலை!
52,479 கோடி முதலீடு (தூத்துக்குடி) - 2095 வேலை!
1,25,000 கோடி முதலீடு - வேலைவாய்ப்பு? 74,898 மட்டுமே.
இந்த விகிதாச்சாரம் (ratio / proportion) சற்றும் பொருந்தி வரவில்லையே...
ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி. வெறுமனே 75 ஆயிரம் பேருக்கு மட்டுமே. அதுவும், என்ன வேலை? என்ன சம்பளம்? ஒருத்தருக்கும் தெரியாது.
நிலம், கட்டிடம், இயந்திரம் என்று நிரந்தர அசையா சொத்துகளில் (fixed assets) பல்லாயிரம் கோடிகளும் வணிகப் பயன்பாட்டுக்கு சில நூறு கோடிகளும் என்று மிக சாதுரியமாக செய்யப்படுகிற 'சிறப்பு' முதலீடுகள் இவை.
முக்கிய நகரங்களில் பிரதான சாலைகளில் மக்கள் அதிகம் புழங்கும் பகுதிகளில் உள்ள சொத்துகள், 'தொழில்' தொடங்க முதலீட்டாளருக்கு வழங்கப்படும். பல சமயங்களில் இது, அடிமாட்டு விலைக்கே கிடைக்கும். ‘தொழில்' / 'வணிகம்' தொடங்குவதற்கு முன்பே பல்லாயிரம் கோடி ரூபாய் ‘முதலீடு' செய்யப்பட்டுவிடும்.
இதன் பிறகு ஒருவேளை ‘வணிகம்' செழிப்பாக நடைபெற்றால், அதற்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கை கூடும். இவர்களில் மிகப் பெரும்பாலோர், மாத ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள். அந்த அளவுக்குதான் இவர்களின் சம்பளம் இருக்கும்.
இத்தனை ஆயிரம் பணியிடங்கள் என்று தம்பட்டம் அடிக்கும் யாரும், புதிய பணியிடங்கள் பற்றிய விவரங்களைச் சொல்வது இல்லை.
என்ன பணி? என்ன ஊதியம்? எப்போது இந்தப் பணி வாய்ப்பு உருவாகும்? இவற்றில் நிரந்தரப் பணி / தற்காலிகப் பணி எத்தனை? இந்தப் பணிக்கு என்ன திறன்கள் தேவை? இவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்? முதலீட்டுக்கும், பணி வாய்ப்புக்கும் இடையே உள்ள கால இடைவெளி எவ்வளவு? இதுகுறித்து விரிவான அறிக்கையை எந்த அரசும் வெளியிடுவது இல்லை.
‘புரிந்துணர்வு' ஒப்பந்தம் எதிலும் வேலைவாய்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இடம்பெறுவது இல்லை
நடப்பு முதலீடு - நேரடியாக வணிகத்தில் வணிக நோக்கத்துக்காக செய்யப்படுவது. நிரந்தர முதலீடு அப்படி அல்ல. இது, சொத்துகள் வாங்க பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழிலுக்கு இத்தனை கோடி ரூபாய்க்கு சொத்துகள் தேவையா? விற்பனை / குத்தகைக்கு விடப்படும் சொத்துகள் எப்போது மீண்டும் ‘நமது' கைக்கு வரும்? தொழில் தொடங்கி இடையில் மூடி விட்டுச் சென்றாலும், சொத்துகள் மட்டும் முதலீட்டாளர் வசமே இருக்கும். இதனைத் திரும்பப் பெற 'புரிந்துணர்வு' ஒப்பந்தம், வழி காட்டுகிறதா?
‘புரிந்துணர்வு' ஒப்பந்தம் குறித்து இன்னொரு வினா - எந்தத் தொழில் தொடங்குவதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் / மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆய்வு / சான்றிதழ் தேவைப்படுமே... இவையெல்லாம் முறையாகப் பெற்ற பின்புதான் 'புரிந்துணர்வு' ஒப்பந்தம் முடிவாகிறதா?
அந்நிய முதலீடு - தொழில் வணிகம் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல; ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை கொண்டது. எனவே இது குறித்த எல்லா உண்மைகளும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒரு ஜனநாயக அரசின் அடிப்படை கடமை இது.
பெரிய அளவில் அந்நிய முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் குறித்த முழு விவரங்களும் பொது வெளியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதன் மீது பொதுமக்களின் ஆட்சேபங்கள் / ஆலோசனைகள், இவற்றின் மீது அரசு / சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதில் நடவடிக்கை - முறையாக அறிவிக்கப்பட வேண்டும்.
இந்த வெளிப்படைத் தன்மை, ‘வெளியில் இருந்து வரும்' முதலீடுகளில் உறுதி செய்யப்பட வேண்டும்.
அந்நிய முதலீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், கீழ்க்காணும் 5 வினாக்களுக்கு விடை அளிப்பதாக இருந்தால் மகிழ்ச்சியே.
* வரவிருக்கும் புதிய தொழில், நமது மனிதவளத்தை அடிப்படையாகக் கொண்டதா? மண் வளத்தை அடிப்படையாகக் கொண்டதா?
* மொத்த முதலீட்டில், 'இங்கே' அசையா சொத்துகள் வாங்க எவ்வளவு செலவிடப்படும்?
* புரிந்துணர்வு ஒப்பந்த நாளில் இருந்து சுமாராக எத்தனை நாட்களில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் நிரந்தர வேலை வாய்ப்புகள் முழுவதுமாக வந்து சேரும்?
* எத்தனை பணியிடங்களுக்கு, சராசரியாக என்ன மாத ஊதியம்?
* புதிய தொழில் தொடங்குவதில் சுற்றுச்சூழல் சிக்கல் இல்லை என்று யாரால் எப்போது எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது?
இந்த விவரங்கள் தெரிந்துவிட்டால் நமக்கு ஏன் வரப்போகிறது அச்சம்? ஏன் எழப் போகிறது கேள்வி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT