Published : 07 Jul 2022 09:28 PM
Last Updated : 07 Jul 2022 09:28 PM
சத்தமே இல்லாமல் ரூ.99 பேஸ்பிளான் (அடிப்படை) திட்டத்தின் கால் கட்டணத்தை அதிகரித்துள்ளது ஏர்டெல் டெலிகாம் நிறுவனம். இந்த கட்டண உயர்வு ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிகிறது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று ஏர்டெல். பல கோடி மக்கள் இந்த நெட்வொர்க்கை தங்களது தொலைத்தொடர்பு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது ஏர்டெல் உட்பட டெலிகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் அடிப்படை மற்றும் குறைந்தபட்ச ரீசார்ஜ் வேலிடிட்டி பிளானாக உள்ள ரூ.99 பிளானுக்கான தொலைபேசி அழைப்பு கட்டணத்தை மாற்றியுள்ளது.
ரூ.99 பிளான்: ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் ரூ.99 அல்லது அதற்கும் மேல் உள்ள பிளான்களை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் அழைப்புகளை (கால் கனெக்டிவிட்டி) பெற முடியும். இந்த கட்டாய ரீசார்ஜ் நடைமுறையை கடந்த 2018 வாக்கில் நடைமுறைக்கு கொண்டு வந்தன ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள். போட்டி நிறுவனத்தின் சவாலை சமாளிக்க இந்த ஏற்பாடு என அப்போது விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதற்கு முன்னர் வரை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவன ப்ரீபெய்ட் கார்டுகளில் இன்கம்மிங் அழைப்புகள் பெறும் வசதி இலவசமாக தான் வழங்கப்பட்டது. இது இலவச இன்கம்மிங் அம்சம் TRAI ஆணையத்தின் பரிந்துரைப்படி கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் அனைத்து கார்டுகளுக்கும் லைஃப் டைம் இன்கம்மிங் கால் இலவம் என சொல்லி சிம் கார்டுகள் இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தில் ஜியோவின் வரவு தங்களுக்கு அழுத்தம் கொடுக்க திட்டத்தை மாற்றியது ஏர்டெலும், வோடபோன் ஐடியாவும்.
அதன்படி குறைந்தபட்சம் ரூ.35 ரீசார்ஜ் செய்தால் தான் இன்கம்மிங் அழைப்புகள் கிடைக்கப்பெறும் என தெரிவித்தன. அதோடு அது குறிப்பிட்ட நாள் வரை தான் செல்லும் எனவும். அது காலாவதியான பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவித்தன இந்நிறுவனங்கள். அதற்கு கைமேல் கிடைத்த பலனையும் அனுபவித்தன. இந்த கார்டுகளை பயன்படுத்தும் பெருபாலான மக்கள் குறைந்தபட்ச ரீசார்ஜ் அல்லது ஒரே சிம் கார்டை மட்டுமே தங்கள் போன்களில் பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாறினார்.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்த கட்டாய அல்லது அடிப்படை ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டது. 35, 49, 79 கடைசியாக 99 என 2018 முதல் கடந்த 2021 (அக்டோபர் - நவம்பர்) வரையில் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்போது ரூ.99 திட்டத்தில் சத்தமே இல்லாமல் கால் கட்டணத்தை (Tariff) உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்தால் 99 ரூபாய் டாக் டைம் பெறலாம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள். அதே நேரத்தில் இந்த பிளானில் நொடிக்கு 2.5 பைசா அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணமாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த மாற்றத்தை கடந்த ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் ஏர்டெல் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த நிறுவனத்தின் வழியில் வோடபோன் ஐடியாவும் இதே மாற்றத்தை அதே பிளானில் கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன்னர் 99 ரூபாய்க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்தார் 99 ரூபாய் டாக் டைம் பெறலாம். 28 நாட்கள் வேலிடிட்டி, நொடிக்கு 1 பைசா வீதம் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் பிடித்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா ரீசார்ஜ் பிளான்களை பயன்படுத்தி வருவதால் 99 பிளானில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் கவனம் பெற தவறியுள்ளது என புதுச்சேரியில் மொபைல் ரீசார்ஜ் கடை வைத்துள்ள சங்கர் தெரிவித்துள்ளார்.
இதர புதிய பிளான்கள்: அடிப்படை பிளானில் சில புதிய பிளான்களையும் கொண்டு வந்துள்ளது ஏர்டெல். ரூ.109, ரூ.111, ரூ.128 மற்றும் ரூ.131 திட்டங்களை கொண்டு வந்துள்ளது. வோடபோன் ஐடியா ரூ.107 மற்றும் ரூ.111 பிளான்களை கொண்டு வந்துள்ளது. இந்த அனைத்து பிளான்களும் ஒரு மாதம் (30 நாட்கள்) வேலிடிட்டி கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT