Published : 05 Jul 2022 01:22 PM
Last Updated : 05 Jul 2022 01:22 PM
மும்பை: உலகளாவிய பொருளாதார பாதிப்புகளால் கிரிப்ட்டோகரன்சி வர்த்தகம் சரிவடைந்து வரும் நிலையில் இந்தியாவில் 1 சதவீத டிடிஎஸ் வரி அமலுக்கு வந்துள்ளதால் அதன் பரிவர்த்தனை பெரும் சரிவு கண்டுள்ளது.
பணவீக்கம் உயர்ந்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால்அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறி வந்த முதலீடுகள் மீண்டும் சந்தையில் குவியத் தொடங்கியுள்ளன. இதன் காரண்மாக கிரிப்டோகரன்சிகளில் இருந்த முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ளன.
இதுமட்டுமின்றி முக்கிய கிரிப்டோ கடன் வழங்கும் நிறுவனமான செல்சியஸ் நெட்வொர்க்கின் முடக்கம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்து வருகின்றது. இதன் தாக்கமும் கிரிட்டோவர்த்தகத்தில் எதிரொலித்து வருகிறது.
கிரிப்டோகரன்சிகள் கடந்த சில தினங்களாக கடும் சரிவு கண்டு வருகின்றன. கிரிப்டோ சந்தையின் மூலதன மதிப்பானது 12.06% சரிவினைக் கண்டு 24,167.79 டாலர்களாக சரிவினைக் கண்டது.
கிரிப்டோகரன்சிகளின் முதன்மையாக கரன்சியாக பார்க்கப்படும் பிட்காயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இந்தநிலையில் டிஜிட்டல் சொத்துக்கள் மாற்றத்தினை கணக்கில் கொண்டு வர 30% வருமான வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் பரிவர்த்தனைகளுக்கு 1% டிடிஎஸ் பிடித்துக்கொள்ளப்படும்.
கிரிப்டோகரன்சி மட்டுமல்லாமல் டிஜிட்டல் சொத்துகள் பரிவர்த்தனைக்கும் 1% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் லாபம் கிடைத்தாலும், நஷ்டம் அடைந்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அமலுக்கு வந்த உடனேயே இந்தியாவில் கிரிப்ட்டோ தினசரி வர்த்தகத்தின் மதிப்பில் 60% மற்றும் 87% வரை சரிவைச் சந்தித்தது.
நேற்று கடுமையாக கிரிப்டோ சந்தை சரிவை சந்தித்த பிறகு ஓரளவு மீண்டு வந்துள்ளன. உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தை 914 பில்லியன் டாலராக அதிகரித்தது. பிட்காயின் 20,000டாலர்களுக்கு மேல் வர்த்தகம் செய்தது. பெரும்பாலான கிரிப்டோக்களின் வர்த்தகம் மேலும் அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் உலகளாவிய கிரிப்டோ சந்தை அளவு 51 சதவீதம் அதிகரித்து 57.59 பில்லியன் டாலராக உள்ளது. அனைத்து ஸ்டேபிள்காயின்களின் அளவு 52.27 டாலர் பில்லியனாக இருந்தது.
இன்று சற்று ஏறினாலும் கூட இனி வரும் காலங்களில் பிட்காயின் தொடர்ந்து சரியும் எனவும் ஒரு பிட்காயினின் விலையானது 15,000 டாலருக்கும் கீழ் குறையும் எனவும் முட்ரெக்ஸ் கிரிப்டோ வர்த்தக பரிமாற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எடுல் படேல் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT