Published : 01 Jul 2022 03:18 PM
Last Updated : 01 Jul 2022 03:18 PM
‘2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் (ரூ.390 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டுவதே இந்தியாவின் இலக்கு’ என்று 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உரக்க அறிவித்தார்.
இந்தியப் பொருளாதாரம் அதனுடைய முதல் டிரில்லியன் டாலரை 2007-ம் ஆண்டிலும் இரண்டாவது டிரில்லியன் டாலரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டிலும் தொட்டது.
மூன்றாவது டிரில்லியனை எட்டாண்டுகள் கழித்து 2022-ம் ஆண்டில் தொட்டிருக்கிறது. பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மூன்றாவது டிரில்லியன் என்கிற மைல்கல்லை இந்தியா வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.
எனினும், பெருந்தொற்றுக்குப் பிறகான அதிகாரப்பூர்வமான கணக்கீட்டின்படியும் சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) கணிப்பின்படியும் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரத்தை 2027-ம் ஆண்டில்தான் எட்டமுடியும் எனத் தெரியவந்திருக்கிறது.
ஆக 2022-ல் 3 டிரில்லியனாக இருக்கும் இந்தியப் பொருளாதாரம், புதிய கணிப்புகளின்படி 5 டிரில்லியன் டாலரைத் தொட இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்.
இந்த இலக்கை அடைவதற்கு மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள், இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஒருபக்கம் என்றால், மிகப் பெரிய சவாலாக இருக்கும் இரு துறைகள் பற்றி பார்ப்போம்.
வேளாண்துறை: பயிர் இழப்பு, சந்தையுடனான தொடர்பு, பருவநிலை மாற்றம், உர விலை உயர்வு போன்ற சவால்களை வேளாண் துறை எதிர்கொண்டு வருகிறது. வேளாண் துறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியமான ஒன்றாகும்.
இன்றைய நிலையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு வேளாண்துறையின் பங்கு சுமார் 400 பில்லியன் டாலராகும். இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் வேளாண்துறையின் பங்களிப்பு இப்போது இருக்கும் அளவைப் போல் இரண்டு மடங்காக உயர வேண்டும்.
2021-22 நிதி ஆண்டில் வேளாண்துறைக்கான கடன் தொகை ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2021 செப்டம்பர் வரை ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
இதோடு ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் 2.5 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.2 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு ஒருபுறம் இருந்தாலும், சந்தையோடு இத்துறையைத் தொடர்புபடுத்துவதில் தீவிரமான உந்துதல் தேவைப்படுகிறது.
பருவநிலை மாற்றம்: பருவநிலை மாற்றத்தால் அனைத்து நாடுகளும் கடுமையான நிதி இழப்பைச் சந்திக்க வேண்டிவரும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் உலக நாடுகளை எச்சரித்து வருகிறார்கள்.
அதன்படி, இந்தியாவுக்கான இழப்பு 2050-ம் ஆண்டில் சுமார் 6 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், மாசு ஏற்படுத்தும் வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக இப்போது எடுத்து வரும் முயற்சிகளும், முதலீடுகளும் தொடர்ந்தால் இதன் மூலம் 2070 ஆண்டுக்குள் சுமார் 11 டிரில்லியன் டாலர் வரை ஆதாயம் கிடைக்கும் என டெலாய்ட் என்கிற ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
> இது,சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment