Published : 01 Jul 2022 10:51 AM
Last Updated : 01 Jul 2022 10:51 AM

இன்று முதல் ரூ.1000 அபராதம்: பான்- ஆதார் எண் இணைக்க தவறினால் நடவடிக்கை

மும்பை: பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பலமுறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

பின்னர், கரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் அசவுகரியக் குறைவைக் கணக்கில் கொண்டு பான்-ஆதார் எண் இணைப்புக்கு மத்திய அரசு கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதன் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மத்திய அரசு 500 ரூபாய் அபராதம் விதித்தது. இதற்கான காலக்கெடுவும் ஜூன் 30-ம் தேதியான நேற்றுடன் முடிவடைந்தது.

ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் இரட்டிப்பு அபராதமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 2023 மார்ச் 31-ம் தேதி வரை இணைத்துக் கொள்ளலாம்.

இந்தகாலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்துவிடும். அத்துடன், ரூ.10,000 அபராதம் வரை செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, பான் கார்டு முடக்கப்பட்டு பயனற்றது ஆகிவிட்டால், அந்தப் பயனற்ற பான் எண்ணைப் பயன்படுத்தும்போது, ரூ.10,000 வரை அபராதம் செலுத்த நேரிடலாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஆதார் - பான் இணைப்பது எப்படி?

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

2. தளத்தின் இடப்பக்கத்தில் உள்ள Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:

மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x