Published : 27 Jun 2022 04:38 PM
Last Updated : 27 Jun 2022 04:38 PM

‘‘ஒரே நிறுவன பணிக்கு பதில் விரும்பியபடி வேலை’’- இந்தியாவிலும் பெரும் மாற்றம்: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல் 

புதுடெல்லி: ஒரே நிறுவனத்தில் பணியாற்றாமல் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் கிக் பொருளாதாரத்தில் இந்தியாவில் தற்போது 77 லட்சம் மக்களைப் பணியாற்றுவதாகவும் 2029-30 ஆம் ஆண்டில் இது 2.35 கோடியாக அதிகரிக்கும் என நிதி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகெங்கிலும் கிக் எகானமி, கிக் வேலை முறை பெரிய அளவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. தாங்கள் விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் இந்தமுறை கிக் என அழைக்கப்படுகிறது. குறைவான நேரத்தில் சரியான வருவாய் ஈட்ட முடிவதால் உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கம் இதனை நோக்கி ஆசையுடன் நகர்ந்து வருகிறது.

கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுயமாக வேலைசெய்ய விரும்புபவர்களும், ஒரு குறிப்பிட்ட வேலையைத் திறம்பட செய்துமுடிக்கும் ஒருவருக்கு அதற்கு மட்டும் ஊதியம் தந்தால் போதுமானது என்று நிறுவனங்களும் எண்ணத் தொடங்கியதன் விளைவே இந்த கிக் எகானமி. இதை ஃப்ரீலான்ஸ் எகானமி (Freelance Economy) என்றும் அழைக்கிறார்கள்.

2027-ம் ஆண்டில் அமெரிக்காவில் மொத்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 8.6 கோடி பேர் கிக் தொழிலாளர்களாக இருப்பார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் கடந்த 3 ஆண்டுகளில் கிக் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் வளரும் கிக் பொருளாதாரம்


இந்தியாவின் கிக் பொருளாதாரம் தற்போது 77 லட்சம் மக்களைப் பணியமர்த்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2029-30 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக 2.35 கோடியாக இருக்கும் என்று நிதி ஆயோக்கின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பூமிங் கிக் மற்றும் பிளாட்பார்ம் எகானமி என்ற இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இது கிக் தொழிலாளர்களின் தற்போதைய அளவை மதிப்பிடுவதற்கான முதல் முயற்சியாகும். இது பாரம்பரிய முதலாளி- பணியாளர் ஏற்பாட்டிற்கு வெளியே பணியாற்றும் நபர்களின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த அறிக்கையாகும்.

கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2019-20 இல் 68 லட்சமாக, நாட்டின் மொத்த தொழிலாளர் தொகுப்பில் 1.3% ஆக இருந்தது. 2020-21 இல் இது 77 லட்சங்களாக, மொத்த தொழிலாளர்களில் 1.5% ஆக அதிகரித்துள்ளது. வரும் 2029-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர வாய்ப்புள்ளது. 2 கோடியே 35 லட்சம் பேர் கிக் தொழிலாளர்களாக இருப்பார்கள் என மதிப்பிட்டுள்ளது. இது 30 மொத்த பணியாளர்களில் 4.1% ஆக இருக்கும்.

சில்லறை வர்த்தகம் மற்றும் விற்பனை துறையில் கிக் தொழிலாளர்களின் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளனர். சுமார் 27 லட்சமாகும். அதைத் தொடர்ந்து 13 லட்சம் போக்குவரத்துத் துறையில் உள்ளனர். சுமார் 6.2 லட்சம் பேர் உற்பத்தி துறையிலும் 6.3 லட்சம் நிதி மற்றும் காப்பீடு துறையிலும் கிக் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போதுள்ள 77 லட்சம் கிக் வேலைகளில் 31% குறைந்த திறன் கொண்டதாகவும், 47% நடுத்தர திறன் கொண்டதாகவும் உள்ளது. 22% மட்டுமே உயர் திறன் கொண்ட வேலைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நடுத்தர திறன்களில் தொழிலாளர்களின் செறிவு படிப்படியாக குறைந்து வருவதையும் குறைந்த திறன் மற்றும் உயர் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் தரவுகள் காட்டுகிறன.

துறையின் திறனைப் புரிந்துகொள்வதிலும், கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் வேலைகளில் மேலும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை நடத்துவதிலும் மதிப்புமிக்க அறிவு வளத்தை பயன்படுத்தும் தேவை உள்ளது.

பிளாட்பார்ம் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் மூலம் நிதியுதவிக்கான அணுகலை விரைவுபடுத்த வேண்டும். அந்தந்த பகுதி மற்றும் கிராமப்புற உணவு வகைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள சுயதொழில் செய்பவர்களை இணைக்கவும், மேலும் அவர்களின் தயாரிப்புகளை பரந்த சந்தைகளுக்கு விற்க உதவும் தளங்களுடன் தெரு உணவுகளை இணைக்கவும் தேவை உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x