Published : 27 Jun 2022 05:47 AM
Last Updated : 27 Jun 2022 05:47 AM
நாமக்கல்: முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர். கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் கொள்முதல் விலை 600 காசுகள் என்ற அதிகபட்ச விலையை எட்டும் என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
முட்டையின் நுகர்வைப் பொறுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணைக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பண்ணைக் கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில், மேலும் 15 காசுகள் உயர்த்தி 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த விலை நிர்ணயம் நாமக்கல் முட்டை விலை வரலாற்றில் உச்சபட்ச விலை என்பதால் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ரூ.6க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது முட்டை நுகர்வோரை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
இதனிடையே கோழித்தீவனம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: கடந்த ஓராண்டாக கோழி பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும், 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது.
எனவே, கோழிப்பண்ணைகளில் கோழிக் குஞ்சு விடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதன்மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்துவந்த நிலையில், தற்போது, 4.20 கோடிமுட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்புள்ளது என்றார்.
பண்ணைக் கொள்முதல் விலை 600 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டால் சில்லறை விற்பனைக் கடைகளில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை
முட்டை கொள்முதல் விலை கடந்த 1-ம் தேதி 480 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485, 9-ம் தேதி 490, 11-ம் தேதி 495, 13-ம் தேதி 505, 16-ம் தேதி 510, 23-ம் தேதி 520, 25-ம் தேதி 535 என ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை நேற்று ஒரே நாளில் 15 காசு அதிகரித்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT