Published : 25 Jun 2022 06:14 PM
Last Updated : 25 Jun 2022 06:14 PM
மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியை இந்தியா வாங்கி வரும் நிலையில் இந்திய சூப்பர் மார்க்கெட்களை திறக்க அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள கச்சா எண்ணெய் சாதனை அளவை எட்டியுள்ளது. இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது.
கச்சா எண்ணெயை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை இந்தியா 30 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கி வருகிறது. இந்த வர்த்தகத்தை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார். இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
காணொலியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது இந்திய சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளில் ரஷ்யாவில் திறப்பதற்காக ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைன் மீது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை அடுத்து வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பிரிக்ஸ் குழுவிலிருந்து நாடுகளுக்கு எங்கள் வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மாற்றியமைத்து வருகிறோம்.
பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யாவின் இருப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
ரஷ்ய சந்தையில் சீன கார்களின் இருப்பை அதிகரிக்க செய்யவுள்ளோம். இந்திய சூப்பர் மார்க்கெட்டுகளை ரஷ்யாவில் திறப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.
சில நாடுகளின் தவறான எண்ணம் மற்றும் சுயநல நடவடிக்கைகளால் உலகப் பொருளாதாரத்தில் உருவாகியுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கு நேர்மையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் அடிப்படையில் மட்டுமே வழிகளைத் தேட முடியும்.
உண்மையில் இந்த நாடுகள் தங்கள் சொந்த பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட தவறுகளை உலகின் பிற பகுதிகளுக்கு மாற்றுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...