Published : 18 Jun 2022 06:28 AM
Last Updated : 18 Jun 2022 06:28 AM
புதுடெல்லி: பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக் (மெடா) மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஆகியவை நிதித் துறையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது:
இந்நிறுவனங்களிடையிலான போட்டி மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளது. இந்நிறுவனங்கள் நிதி சேவையில் ஈடுபடுவது தொடர் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இவற்றை முறையாக கண்காணிக்க வேண்டியுள்ளது.
இந்நிறுவனங்கள் இணைய வர்த்தகம், தேடுபொறி, சமூக வலைதளம் என அனைத்து தளங்களிலும் ஈடுபட்டுள்ளன. இது தவிர இவை அனைத்தும் மிகப் பெருமளவில் வர்த்தகம் சார்ந்து நிதிச் சேவையில் ஈடுபடுகின்றன.
இவை சுயமாகவோ அல்லது ஏதேனும் நிறுவனத்துடன் இணைந்தோ இத்தகைய சேவையில் ஈடுபடுகின்றன. இவை புதிய தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறை மூலம் செயல்படுத்துகின்றன. ஆனால் இவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
கடனை திரும்ப வசூலிப்பதில் கடுமையான நடைமுறையை இவை பின்பற்றுகின்றன. ஆபாச வார்த்தைகளில் வாடிக்கையாளரை அகால நேரத்தில் அழைத்து துன்புறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல. இதுகுறித்து புகார் வந்தால் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT