Published : 15 Jun 2022 12:10 PM
Last Updated : 15 Jun 2022 12:10 PM

விரைவில் வருகிறது 5ஜி: 4ஜியை விடவும் 10 மடங்கு வேகம் அதிகம்; ஏலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 ஜூலை மாதத்தில் நடத்தவும், 5ஜி சேவைக்கான வர்த்தக வெளியீடு சுதந்திர தினத்தன்று நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

2022-23-ம் நிதி ஆண்டில் 5ஜி சேவையை அளிக்க முன்வரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிராய் அமைப்பு 5 ஜி ஏலம் குறித்த விரிவான தகவலை வெளியிட்டது. அதில் விலை அளவு மற்றும் நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இதற்கான கட்டணம் குறித்தும், நெட்வொர்க் குறித்தும் தனியார் நிறுவனங்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. 5-ஜி அலைக்கற்றைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரம் மிக அதிகம் என்று இத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற நிலைக்குழுவும் கருத்து தெரிவித்து இருந்தது.

சசி தரூர் தலைமையிலான அக்குழு தனது பரிந்துரையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் அது நீண்டகால அடிப்படையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடபட்டு இருந்தது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை (டிராய்) ஆணையமும் இக்கருத்தை சுட்டிக்காட்டியது.

அதேபோல கட்டிடங்களுக்குள் 5ஜி அலைக்கற்றை செல்வதில் உள்ள பிரச்சினை குறித்தும் டிராய்கவலை தெரிவித்தது. இதனால் அலைக்கற்றை ஏலம் தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகின.

மத்திய அரசு அனுமதி

இந்தநிலையில் தனியார் 5ஜி நெட்வொர்க்குகளை இயக்குவதற்கு வழி வகுக்கும் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி சேவைகளை வழங்குவதற்காக வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும். தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைக்க 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலம் விடப்படுகிறது.

ஜூலை இறுதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்துவதாக மத்திய திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த ஏலத்தில் நாட்டின் மூன்று முக்கிய நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஜியோ ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்பாடு

டெலிகாம் சேவை வழங்குநர்களுக்கு வணிகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதற்காக நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும் ஏர்வேவ்களுக்கான முன்பணத்தை நீக்கியுள்ளது. இதுமட்டுமின்றி ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கு 20 சமமான மாதாந்திர தவணைகளில் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் தனியார் கேப்டிவ் நெட்வொர்க்குகளை அமைக்க அனுமதி தரப்படுகிறது. விரைவில் வெளியாகும் 5ஜி சேவை தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி சேவையை விடவும் 10 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5ஜி சேவைகள் புதிய ஊக வணிகங்களை உருவாக்குவதற்கும், நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கும், வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் சாத்தியம் உள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதுமையான பயன்பாடு மற்றும் தொழில்நுட்பங்கள் வளரவும் வாய்ப்பாக அமையும். இதுமட்டுமின்றி ஏற்கெனவே உள்ள கல்வி மற்றும் வங்கி சார்ந்த சேவைகள் பெரிய அளவில் இந்தியாவில் பல்கி பெருக வாய்ப்பு ஏற்படும் எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x