Last Updated : 07 Jun, 2022 12:12 PM

2  

Published : 07 Jun 2022 12:12 PM
Last Updated : 07 Jun 2022 12:12 PM

இந்தோனேசியாவின் பாமாயில் தடையை பயன்படுத்திக் கொண்டதா அதானி வில்மர்?- விரிவடைந்த வர்த்தகம்; உச்சம் கண்ட பங்குகள்

மும்பை: ரஷ்ய – உக்ரைன் போரை தொடர்ந்து சமையல் எண்ணெய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, பாமாயில் இறக்குமதிக்கு இந்தோனேசியாவிதித்த தடை போன்ற காரணங்களால் அதானி வில்மர் நிறுவனத்துக்கு மறைமுக பலன்களை தந்ததாக கூறப்படுகிறது. அதுபோலவே பிப்ரவியில் பட்டியலிடப்பட்ட அதானி வில்மரின் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபமும் கிடைத்துள்ளது. அதானி வில்மர், ரூச்சி சோயா உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் லாபம் ஈட்டியுள்ளன.

அதானி நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனத்துடன் இணைந்து சமையல் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதானி வில்மர் சார்பில் பார்ச்சூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வகை உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

குறிப்பாக கச்சா பாமாயில் வாங்கி சுத்திரிகரித்து விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்தநிலையில் உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்தது.

மலேசியோ, இந்தோனேசியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது.

ஆனால் கச்சா பாமாயில் ஏற்றுமதியைஇந்தோனேசியா தடை செய்யவில்லை. இதனால் பல நாடுகளில் இருந்து கச்சா பாமாயிலை வாங்கி அதானி வில்மர், ரூச்சி சோயா போன்ற நிறுவனங்கள் சுத்திகரித்து சந்தையில் விற்பனை செய்தன. இதனால் அந்த நிறுவனங்களின் லாபமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதிகரித்த லாபம்

மார்ச் 2022 காலாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டுக்கான அதன் முடிவுகளில் அதானி வில்மர் தனது வர்த்தகத்தில் பெரிய அளவு உயர்வை பதிவுசெய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விலை 30-35 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

கடந்த 2020-21 நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.37,195 கோடியாக இருந்தநிலையில் 2021-22 நிதியாண்டில் ரூ.54,386 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 46.20 சதவீத லாபம் ஈட்டியுள்ளது.

அதுபோலவே கடந்த 2020-21 நிதியாண்டில் அதானி வில்மர் நிறுவனத்தின் லாபம் ரூ.728 கோடியாக இருந்தநிலையில் 2021-22 நிதியாண்டில் ரூ.800 கோடியாக உயர்ந்துள்ளது. இது 9.90 சதவீதம் மட்டுமே. வர்த்தகம் அதிகரித்தபோதிலும் லாபம் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

அதற்கு காரணம் திடீரென ஏற்பட்ட விலைமாறுபாடு, போக்குவரத்துச் செலவு உயர்வு, நிறுவனத்தின் செலவுகள் போன்றவை காரணங்களாக கூறப்படுகின்றன. எனினும் இந்த ஆண்டில் மொத்த லாபம் ரூ.1,059 கோடியாக இருந்துள்ளது.

உயர்ந்த பங்குகள்

அதானி வில்மார் பங்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டுக்கு பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.230 முதல் தொடங்கி ரூ.878 வரை சென்றது.

அதானி வில்மரின் பங்குகள் இந்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. நிறுவனம் ஐபிஓவுக்கான பங்கு விலையை ரூ.230 ஆக நிர்ணயித்தது, அது பிஎஸ்இயில் ரூ. 221ஆகவும், என்எஸ்இயில் ரூ.227 ஆகவும் பட்டியலிடப்பட்டது. ஆனால் பின்னர் அது வேகமெடுத்தது. ஏப்ரல் 28, 2022 அன்று, இந்தப் பங்கு ரூ. 878 என்ற விலையை எட்டியது.

இது அதானி வில்மர் பங்கின் அதிகபட்ச உயர்வாகும். முதலீட்டாளர்கள் 282 சதவீதம் வரை வருமானம் ஈட்டியுள்ளனர். இதன் மூலம் ஆசியாவிலேயே உணவுத்துறையில் வெளியிடப்பட்ட ஐபிஓக்களில் சிறப்பாகச் செயல்பட்ட பெருமையை அதானி வில்மர் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் அதானி வில்மர் லிமிடெட் ஆசியாவின் புதிதாக பட்டியலிடப்பட்ட பங்குகளில் அதன் அறிமுகத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து சாதனை படைத்தது.

2022ம் ஆண்டில் ஆசியப் பங்குச்சந்தையில் இதுவரை 121 நிறுவனங்கள் ஐபிஓக்களை வெளியிடப்பட்டன. இவற்றின் மதிப்பு மட்டும் 100 மில்லியன் டாலர்களாகும். ஆனால் இதில் அதானி வில்மர் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரி நீக்கம்

இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கி விட்டது. இதனால் சுத்திரிக்கப்பட்ட பாமாயில் தற்போது எங்கும் கிடைக்கும் சூழல் உள்ளது. இதனால் பாமாயில் விலையும் அடுத்து வரும் நாட்களில் கணிசமாக குறையும் எனத் தெரிகிறது.

இதுமட்டுமின்றி மத்திய அரசு சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் எண்ணெய் இறக்குமதிக்கான வேளாண் இறக்குமதி வரியை 2024-ம் ஆண்டுவரை நீக்கியது.இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்வை தடுக்கும் நோக்கத்துடன் இந்தந நடவடிக்கையை தொடர்ந்து அதானி வில்மர் பங்குகள் தனது உச்சத்தில் இருந்து சரிந்தது.

எனினும் அதானி வில்மர் பங்குகள் மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளன. பின்னர் சற்று ஏற்றம் கண்டு ரூ.660 ஆக உயர்ந்தது. எனினும் வெளியீட்டு விலையான 227 ரூபாயை ஒப்பிடுகையில் தற்போதைய விலை என்பது ஏறக்குறைய 3 மடங்காகவே உள்ளது.

பாமாயில் தடையை இந்தோனேஷியா நீக்கிய நிலையில் இந்தியாவில் இறக்குமதி வரியை நீக்கியதாலும் சற்று குறைந்துள்ள வர்த்தகம் எதிர்காலத்தில் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் எண்ணெய் வணிகத்தில் 6 முதல் 8 சதவீத வளர்ச்சியும், பேக் செய்யப்பட்ட உணவு வணிகத்தில் 30 சதவீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அதானி வில்மர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x