Published : 03 Jun 2022 07:20 PM
Last Updated : 03 Jun 2022 07:20 PM
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவு. இதில் பலரும் எதிர்கொள்ளும் முதல் சவாலே நிதி நெருக்கடிதான். கையில் பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டுவது பெரும்பாலானோருக்கு சாத்தியம் ஆகாது. எனவே, வீடு கட்டுபவர்களின் இப்போதைய முதல் இலக்கு வீட்டுக்கடன் தான்.
ஒருவருக்கு வீட்டுக்கடன் என்பது, அவர் வாங்கும் சம்பளம் அல்லது அவரது வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சம்பளதாரர்களாக இல்லாமல் தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களது ஆண்டு வருமானத்தை வைத்து கணக்கிட்டு வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
வங்கியை அணுகி கிடைக்கக்கூடிய கடன் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துவிட்டால் அதற்கு ஏற்ப நாம் கட்ட ஆசைப்படும் வீட்டை கட்ட எவ்வளவு செலவு செய்வது என்பதை முடிவு செய்ய எளிமையாக இருக்கும்.
எவ்வளவு கடன்?
பிற இஎம்ஐ போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் 35% பணம் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். நிதி நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி வீட்டுக்கடன்களை வழங்குகின்றன.
கூட்டுக்கடன்
கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது இரண்டு பேர் சேர்ந்து கடன் வாங்கலாம். அவ்வாறு கடன் வாங்கும்போது கூடுதல் தொகையை கடனாக பெற வாய்ப்புண்டு. வாங்கும் தொகைக்கு இருவரும் பொறுப்பேற்பதாலும், இருவரது வருமானமும் காரணியாக அமைவதால் இந்த முறையிலான கூட்டுக்கடனுக்கு வங்கிகள் எளிதில் ஒப்புதல் தருகின்றன. தவணையை திருப்பி செலுத்தும்போது இணை விண்ணப்பதாரரின் வருமானமும் கணக்கில் கொள்ளப்படுவதால் இணை விண்ணப்பதாரரைச் சேர்ப்பது ஒரு பெரிய தொகையை கடனாக பெற உதவும்.
மாத தவணை
வாங்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். இஎம்ஐ எனப்படும் மாத தவணை போக வாங்கும் சம்பளத் தொகையில் 35 சதவீதமாவது மீதம் இருந்தால் தான் அன்றாட செலவுகளைச் சமாளிக்க இயலும். எனவே அதனை கணக்கிட்டு வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
வீ்ட்டுக்கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை என்பது கடனுக்கான தொகை, வட்டி வீதம், கடன் செலுத்தும் காலம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். இதன் மூலமே இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆவணங்கள்
வங்கிக்கடன் வாங்க கொடுத்த விண்ணப்பப்படிவத்தின் நகல், கடனுக்காக வழங்கப்பட்ட ஆவணங்களின் நகல்கள், வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதம், வங்கிக் கொடுத்த ஆவணங்கள் இதனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
முன்கூட்டியே செலுத்தலாமா?
வீட்டுக்கடன் பெற்றவர்கள் இஎம்ஐ தவிர கூடுதல் தொகையை செலுத்தி வீட்டுக்கடன் பெறும் காலத்துக்கு முன்பாகவே செலுத்தி முடிக்க முடியும். இதன் மூலம் வட்டியை குறைத்துக் கொள்ள வாய்ப்புண்டு.
வங்கிக்கடன் தொகைக்கான இஎம்ஐ செலுத்தும் தொகையை அதிகப்படுத்துவதால், விரைவில் கடனை அடைக்க முடியும். அதாவது குறைவான தொகை நீண்ட ஆண்டுகள் என்பதற்கு பதிலாக அதிகமான தொகை குறைவான ஆண்டுகள் என்று திட்டமிடலாம். வருமானம் உயரும்போது, அந்த உபரித்தொகையை இஎம்ஐ செலுத்தும்போது, விரைவாக கடனை அடைக்க முடியும்.
> இது, நெல்லை ஜெனா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment