Published : 01 Jun 2022 04:18 AM
Last Updated : 01 Jun 2022 04:18 AM
கடலூர்: கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2021-2022 நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவனம், ரூ.1,237 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளது. முந்தை நிதியாண்டின் லாபத்தை விட இது 22 சதவீதம் அதிகம்.
என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2021-22) தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை செயல்பாடுகளை வெளியிடுவதற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்நிறுவனம், தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து அதிகபட்சமின் உற்பத்தி, மின்சக்தி ஏற்றுமதி, நிலக்கரி உற்பத்தி, பழுப்பு நிலக்கரி விற்பனை போன்ற துறைகளில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் அதன் வரலாற்றில், புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 2021-22-ம் நிதியாண்டில் ரூ.10,662 கோடி மொத்த வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த 2020-21ம் ஆண்டில் ஈட்டப்பட்ட மொத்த வருவாயான ரூ.8,967 கோடியை விட, இது 19 சதவீதம் அதிகம். அதுபோல 2021-22-ம் நிதி ஆண்டு, இந்நிறுவனம் முந்தைய நிதி ஆண்டை விட 22 சதவீதம் அதிகபடியான நிகர லாபத்தை பெற்றுள்ளது. அதாவது, முந்தைய 2020 -21-ம் நிதி ஆண்டில் ரூ.1,010 கோடி நிகர லபமாகப் பெற்றிருந்த நிலையில், 2021-22-ம் ஆண்டு ரூ.1,237 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவன நிலக்கரி சுரங்கத்தில், ஒரு ஆண்டில், 63 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுத்தது, ரூ.830 கோடிக்கு விற்பனை செய்தது ஆகிய இரண்டும் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புதிய சாதனைகளாகும். பழுப்பு நிலக்கரியைப் பொறுத்தவரையில், முந்தைய 2020-21 நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிமாக வெட்டி எடுத்து, ரூ.824 கோடிக்கு விற்பனை செய்து, அத்துறையிலும் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2022 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், என்எல்சி இந்தியா நிறுவன மின் நிலையங்கள் மட்டும் 2,502 கோடியே 20 லட்சம் யூனிட் மின்சக்தியை உற்பத்தி செய்து, அவற்றில் 2,204 கோடியே 10 லட்சம் யூனிட் மின்சக்தியை மின்வாரியங்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட முறையே 29, 32 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களையும் சேர்த்து, 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.12,546 கோடி மொத்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. முந்தைய 2020-21-ம் ஆண்டு ஈட்டப்பட்ட மொத்த வருவாயான ரூ. 11,798 கோடியை விட, இது 6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல துணை நிறுவனங்களையும் சேர்த்து 2021-22-ம் நிதியாண்டில் ரூ.2603 கோடியை இந்நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. 2020-21-ம் ஆண்டில் ஈட்டப்பட்டவரிக்கு முந்தையலாபத்தொகையான ரூ. 2223 கோடியை விட, இது 17 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனம் 2021-22ம் ஆண்டில், தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து, மொத்தம் 2,920 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்து, அதன் வரலாற்றில் அதிகபட்ச அளவினை பதிவு செய்துள்ளது. அதுபோன்று 2,589 கோடி யூனிட் மின் சக்தியை, மின் வாரியங்களுக்கு விற்பனை செய்து, ஒரு ஆண்டில் அதிகபட்ச விற்பனை அளவினை எட்டியுள்ளது.
இந்நிறுவன குழுமம் உற்பத்தி செய்யும் மின்சக்தியை மாநில மின்வாரியங்களுக்கு விற்பனை செய்து, அதற்கான மின் கட்டணங்களை வசூலிக்கும் துறையில், முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகைகளையும் வசூல் செய்ததன் மூலம், கடந்த 2021-22 ம் நிதி ஆண்டில் கோரப்பட்ட மின் கட்டண தொகையைவிட 46 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT