Published : 27 May 2022 05:27 PM
Last Updated : 27 May 2022 05:27 PM

ரூ.80,000 கோடி இழப்பு: பங்கு வெளியீட்டு விலையில் இருந்து பெரும் சரிவு கண்ட எல்ஐசி சந்தை மதிப்பு

மும்பை: பெரும் எதிர்பார்ப்புடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி பங்குகளின் சந்தை மதிப்பு வெளியீட்டு விலையில் இருந்து ரூ.80,000 கோடிக்கு மேல் சரிந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது.

பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எல்ஐசி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை.

எல்ஐசி பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது. எனினும் பின்னர் பங்கு விலை சற்று உயர்ந்தது. சந்தைக்கு வந்த முதல் நாளிலேயே பெரும் லாபம் ஈட்டலாம் என்று எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் சென்செக்ஸ் உயர்ந்தும் கூட எல்ஐசி பங்குகள் விலை உயராததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் எல்ஐசியின் மதிப்பீடு அதன் வெளியீட்டில் இருந்து ரூ.80,000 கோடிக்கு மேல் சரிந்துள்ளது. இதுமட்டுமின்றி பட்டியலிடப்பட்ட தேதியில் இருந்து சுமார் ரூ.42,500 கோடி சந்தை மூலதனம் (எம்கேப்) இழந்தது. முன்பு இது ரூ.38,000 கோடியாக இருந்தது.

இதுபோலவே ரூ.949 வெளியீட்டு விலையில் எல்ஐசியின் சந்தை மூலதனம் ரூ.6,00,242 கோடியாக இருந்தது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட விலையின் அடிப்படையில் எல்ஐசியின் மதிப்பீடு ரூ.5,57,675 கோடியாகக் குறைந்தது. இதன் விளைவாக ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டது.

இன்று பங்குசந்தை முடிவுக்குப் பிறகு எல்ஐசியின் சந்தை மூலதனம் சுமார் ரூ.5,19,630 ஆக இருந்தது. வெளியீட்டு விலையிலிருந்து சுமார் ரூ.80,600 கோடி மதிப்பிலான இழப்பையும், தள்ளுபடி செய்யப்பட்ட பட்டியல் விலையிலிருந்து ரூ.38,045 கோடி இழப்பையும் சந்தித்துள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று எல்ஐசி பங்குகள் ரூ.821.55 இல் முடிந்தது. அதன் வெளியீட்டு விலையைவிட கிட்டத்தட்ட 13.5 சதவீதம் குறைந்துள்ளது. பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து 5.2 சதவீதத்திற்கும் அதிகமாகவும் குறைந்துள்ளது.

இதனால் எல்ஐசியில் பெரும் எதிர்பார்ப்புடன் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்ற குழுப்பத்தில் உள்ளனர். பங்குகளை வைத்திருப்பதா அல்லது விற்று விடுவதா என்ற மனநிலை உள்ளது. பங்கு விலை ஏறுமா அல்லது இதை விட இறங்கி விடும் ஆபத்து உள்ளதா என்ற அச்சமும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x