Published : 20 May 2022 05:44 PM
Last Updated : 20 May 2022 05:44 PM
மும்பை: நட்சத்திர ஓட்டலான மும்பையில் அமைந்துள்ள தாஜ் ஓட்டலுக்கு அம்சமான வெள்ளை நிற நானோ மின்சார காரில் கெத்தாக வந்து இறங்கியுள்ளார் டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. அவரது இந்த செயல் பலரையும் ஈர்த்துள்ளது. 'லெஜெண்ட்' என அவரை நெட்டிசன்கள் போற்றி வருகின்றனர்.
மின்சார சக்தியில் இயங்கும் இந்தக் காரை அவருக்கு 'எலெக்ட்ராEV' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பரிசாக வழங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனரும் ரத்தன் டாடா தான்.
இந்நிறுவனம் டாடா மற்றும் இன்னும் சில நிறுவனங்களுக்கு மின்சார வாகனம் சார்ந்த உற்பத்தியில் உதவி வருகிறது. 84 வயதான அவர் 21 வருடங்கள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. டாடா நானோ காரை பெருங்கனவுடன் இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்திருந்தார் ரத்தான் டாடா. அது குறித்து அண்மையில் அவரே சொல்லி இருந்தார்.
கடந்த 2008 வாக்கில் இந்திய வாகன சந்தையில் டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அறிமுக விலை 1 லட்ச ரூபாய். ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்ய டாடா முடிவு செய்திருந்தது. ஆனால், அதனை டாடா நிறுவனம் எட்டவில்லை. சந்தையில் வரவேற்பு இல்லாதது, உற்பத்தியில் சிக்கல் போன்ற காரணங்களால் அது தடைபட்டது.
ரத்தன் டாடா இப்போது பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகளும் கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த நானோ காரை அவரது உதவியாளர் சாந்தனு நாயுடு ஓட்டி வந்தார். அவரது பாதுகாப்புக்கு பாதுகாவலர்கள் கூட யாரும் உடன் வரவில்லை என்பதை நெட்டிசன்கள் கவனித்துள்ளனர்.
அவரது எளிமையை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது எனவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT