Published : 18 May 2022 03:38 PM
Last Updated : 18 May 2022 03:38 PM

இலங்கையை போல மாநிலங்களை திணற வைக்கும் கடன் சுமை: பெரும் சிக்கலில் பஞ்சாப்: மற்ற மாநிலங்கள் எவை?

புதுடெல்லி: கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் சிக்கலை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் இதேபோன்று ஜிஎஸ்டிபி- கடன் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக பெரும் தொகைய செலவு செய்யும் மாநிலங்கள் வளர்ச்சி திட்டங்களுக்காக நம்பி இருப்பது கடனை தான்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகின்றன.

சமையல் எண்ணெய் தொடங்கி கோதுமை வரை பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இது எல்லாவற்றிக்கும் மேலாக கடன் சுமை என்பது அந்த நாட்டை கடுமையாக ஆட்டிப்படைத்து வருகிறது.

இலங்கையின் கடன் /ஜிடிபி விகிதம் 120 சதவீதமாகும். அதாவது நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி விகித்த அளவை விடடும் அதிமாக 20 சதவீதம் அந்த நாடு கடன் வைத்துள்ளது. 50 சதவீதம் என்பதே ஆபத்தான அளவு என்கிறபோது இலங்கையின் கடன் அளவு 120 சதவீதமாக உயர்ந்துள்ளது பெரும் கவலையளிக்கும் அம்சமாகும்.

இலங்கையை போலவே துருக்கி, பாகிஸ்தான், லெபனான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடன் சுமை என்பது இன்று மிகப்பெரிய பொருளாதார சவாலாக உருவெடுத்துள்ளது.

கடன் வாங்கும் மாநிலங்கள்

இந்தநிலையில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களின் பொருளாதார நிலையும் கடன் சுமையால் ஆபத்தான இடத்தை நோக்கி நகர்ந்து வருவது தெரிய வந்துள்ளது. இலங்கையை போலவே அதிகமாக வாங்கப்படும் கடன் அந்த மாநிலங்களில் பெரும் நிதி சுமையை ஏற்படுத்தி வருகிறது. மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபி- கடன் அளவு என்பது சில மாநிலங்களில் கவலையளிக்கும் விதித்தில் உள்ளது.

இதில் முதல் மாநிலமாக இருப்பது பஞ்சாப். கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பஞ்சாபில் ஜிஎஸ்டிபி- கடன் அளவு 53.3 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம்.

சிக்கலில் பஞ்சாப்

மாநிலத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதாவது மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் கடன் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஜிடிபி 71 பில்லியன் டாலர்களாகும்.

அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்சிகளும் இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தன. அங்கு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி, மக்களுக்கு மாதம்தோறும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனை செயல்படுத்த பஞ்சாப் அரசுக்கு ஆண்டுக்கு.5,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு கூடுதலாக 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு விடும்.

மற்ற மாநிலங்கள்

பஞ்சாப் போலவே பல இந்திய மாநிலங்கள் இலங்கையை போன்றே நிதி நிலை உள்ளன. அவற்றில் ஜிஎஸ்டிபி- கடன் அளவு என்பது ராஜஸ்தானில் 39.8 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 38.8 சதவீதமாகவும், கேரளாவில் 38.3 சதவீதமாகவும், ஆந்திர பிரதேசத்தில் 37.6 சதவீதமாகவும் உள்ளது.

ஜிடிபியை பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் ஜிடிபி 118 பில்லியன் டாலர்களாகவும், ஆந்திர மாநிலத்தில் ஜிடிபி 130 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. பிஹாரில் ஜிடிபி 99 பில்லியன் டாலர்களாகவும் ஹரியாணா மாநிலத்தில் ஜிடிபி 100 பில்லியன் டாலர்களாக உள்ளது.

2016-ம் ஆண்டில் நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மறுஆய்வு செய்ய என்.கே.சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு 2017 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அதன் மொத்தக்கடன் 2023 க்குள் 20 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தது.

ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மாநிலங்களின் மொத்த கடன்-ஜிடிபி விகிதம், 2022 மார்ச் இறுதியில் 31 சதவிகிதமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் 2022-23 இல் 20 சதவிகிமாக குறைக்க வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

20 இலக்கு நிறைவேறுமா?

மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கையொட்டி குஜராத் (21.4%) மற்றும் மகாராஷ்டிரா (20.4%) ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே 20 சதவிகிதமாக உள்ளன. இந்த கடன் சுமைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று இலவசங்கள் ஆகும். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக பல கட்சிகளும் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. இதனை செய்ய முற்படும்போது நீண்டகாலத்துக்கு மாநில அரசுகளுக்கு பெரும் சுமை ஏற்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக அண்மையில் தகவல் வெளியானது.

இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக பெரும் தொகையை மாநில அரசுகள் செலவழித்து விடுவதால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடன் வாங்கும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன. மாநில அரசுகளிடம் பணம் இல்லாதபோது, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் செல்கின்றன.

இந்தியாவின் பல மாநிலங்களில் 28 பில்லியன் டாலர்கள் உலக வங்கியிடம் கடன் பெற்று 127 வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வரம்பற்ற கடன் பெறுவதால் ஏற்படும் நிதிச் சுமை என்பது மாநில அரசை கடுமையாக நெருக்கடிக்குள் தள்ளி விடுகிறது. மாநில்கள் கடன் அளவை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கு என்பது எப்போது நிறைவேறும் என்பது தான் கேள்வியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x