Published : 12 May 2022 07:49 AM
Last Updated : 12 May 2022 07:49 AM
புதுடெல்லி: ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இருந்து அதிக அளவில் கோதுமையை பிற நாடுகள் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய நிதி ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 2,42,857 டன்னாகும். முந்தைய நிதி ஆண்டில் (2021-22) இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 7 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள உள்கட்டமைப்புகள் நாசமாகி உள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனால் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
போர் தொடங்கிய பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தியாவில் இருந்து கோதுமையை பல நாடுகளும் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன.
மே மாதத்தில் 15 லட்சம் டன்னாக இருக்கும் என்று டெல்லியைச் சேர்ந்த கோதுமை ஏற்றுமதி வர்த்தகர் தெரிவித்துள்ளார். ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மிக அதிக அளவில் இந்தியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்கின்றன.
இந்தியாவில் இருந்து தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சர்வதேச அளவிலான கோதுமை வர்த்தகத்தில் உக்ரைனின் பங்கு 29 சதவீதமாகும். இங்கிருந்து அதிகளவில் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு எகிப்து.
தற்போது கோதுமையை உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்ய முடியாததால் முதல் முறையாக இந்தியாவிலிருந்து கோதுமையை எகிப்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், துருக்கி, இந்தோனேசியா, மொசாம்பிக், தான்சானியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் கீழ் சோமாலியா, கென்யா, டிஜிபோடி உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கோதுமை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒரு டன் கோதுமை 295 டாலர்மற்றும் 340 டாலர் விலையில் ஏற்றுமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT