Published : 10 May 2022 05:05 PM
Last Updated : 10 May 2022 05:05 PM

குழந்தைக்கு தனியாக ‘பெர்த்’: ரயில்களில் புதிய படுக்கை வசதி அறிமுகம்

புதுடெல்லி: ரயில்களில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் அவர்களுக்காக தனியாக குழந்தைக்கு தனியாக படுக்கை வசதி ரயில்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரயில்களில் இரவுநேர பயணத்தின்போது படுக்கை வசதி கொண்ட ரயில்களில் முன்பதிவு செய்யும்போது குழந்தைகளாக இருந்தால் பாதி கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தனியாக பெர்த் வழங்கப்பட்டது. பாதிக்கட்டணத்தில் பெர்த் வழங்கியதால் ரயில்வே நிர்வாகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடன் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதிக் கட்டணத்தில் தனியாக படுக்கை வழங்குவது நிறுத்தப்பட்டது. அதே பாதிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேசமயம் பயணம் செய்யும் தாய் மார்கள் தாங்கள் படுக்கும் படுகையிலேயே குழந்தையை படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையே தற்போது பின்பற்றப்படுகிறது.

இந்தநிலையில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி தற்போது ரயில்களில் அறிமுகம் ஆக உள்ளது. அன்னையர் தினத்தையொட்டி ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு ரயில்வேயில் லக்னோ மெயில் ரயிலின் முன்பதிவு பெட்டியில், பெண்கள் பயணம் செய்யும்போது அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான பெர்த் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.

தாயின் சீட்டை ஒட்டியே குழந்தைக்கான சீட்டும் பொருத்தப்பட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் பெண்கள் பயணம் செய்யும்போது, அவர்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்க, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
நீண்ட துாரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் ஏசி முன்பதிவு பெட்டிகளில், இந்த வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணியர்கள் கூறுகையில் ‘‘ இரவு நேர பயணங்களில் குழந்தையை மடிமேல் படுக்க வைத்து, மிகுந்த சிரமத்துக்கு விடிய விடிய ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. தாய்மார்கள் இந்த வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால் நிச்சயம் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்’’ எனத் தெரிவித்தனர்.

ஏசி பெட்டிகளை தொடர்ந்து சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி தந்தால் உபயோகமாக இருக்கும் என்றும் பயணியர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x