Published : 09 May 2022 08:09 PM
Last Updated : 09 May 2022 08:09 PM
கோவை: “நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள அனைத்து இடங்களிலும் தனியார் துறையினர் வரலாம்” என்று கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'கோவை ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி' சார்பில் கோவையிலுள்ள தொழில்முனைவோருக்கு ‘‘ஸ்டார்ட் ஆப் துருவ்’’ விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஸ்டார்ட் அப் அகாடமியின் தலைவர் ஜி.கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கினார்.
தொகுப்பு தொழில் கட்டமைப்புகள்: பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: "அந்தக் காலத்தில் தொகுப்பாக உள்ள தொழில் கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எந்தெந்த நிறுவனம் எங்கு இருக்க வேண்டும் என மத்தியில் முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு தொகுப்பாக உள்ள தொழில் கட்டமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் அவர்களின் உற்பத்தி அளவு நிர்ணயிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதுபோன்ற நடைமுறைகளால் தான் 'லைசென்ஸ் கோட்டா ராஜ்' என்ற பெயர் வந்தது. தொழிலில் உற்பத்தியை அதிகரித்து, உள்ளூர் விற்பனைக்கு போக, மீதியை ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கும் அந்நிய செலாவணி கிடைக்கும்.
கொள்கையில் மாற்றம்: நமது நாட்டில், பல நூற்றாண்டுகளாக தொழிலோ, உற்பத்தியோ, விவசாயமோ செய்து வந்தனர். நடுவில் பல தரப்பட்ட இடையூறுகள் காரணமாக, உற்பத்தி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் இயற்கையான திறமைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டன. இந்தச் சூழலில், நம் நாட்டில் இருக்கும், தொழில் செய்யக்கூடிய, இயற்கையாக உள்ள தத்துவத்தை முழுமையாக உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கொள்கையில் மாறுதல் வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். கொள்கையில் மாறுதல் ஏற்படுத்தியதால் தான் கடந்த 2021 நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறைக்கு என பிரத்யேக இடம் எங்கும் இருக்காது எனக் கொள்கையாகவே அறிவித்தோம். பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தனியார் துறைகளும் வரலாம். இதனால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களிலும் தனியார் துறையினர் வரலாம்.
ஸ்டார்ட் அப் திட்டம்: நாட்டின் நலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயம் இருக்கும். தனியார் துறையினர் எங்கு அவர்களுக்கு வணிக ரீதியில் வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு முதலீடு செய்து தொழில் செய்யலாம். அதற்காக வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொகுப்பாக உள்ள தொழில் கட்டமைப்புகளுக்கு மட்டும் என்று இருந்ததை, அனைவருக்குமானது என மாற்றியுள்ளோம்.
சிறு, குறு தொழில்களில் இன்னும் திறமையையும் புதுமையையும் புகுத்தலாம் என்ற எண்ணத்தோடு வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இதுவே சரியான தருணம் என்பதை புரிந்து கொண்டு, ஸ்டார்ட் அப் திட்டத்தை 2015-ல் பிரதமர் ஆதரித்தார். தற்போது வெப் 3 யுகத்தில் இருக்கும் நாம் ஒவ்வொரு பிரிவிலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, அவற்றைப் பயன்படுத்துவதால் திறன்களை மேம்படுத்த முடியுமா என யோசிப்பது, அதற்கு தீர்வு காண்பது ஆகியவற்றில் கோவையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், தொழிலதிபர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT