Published : 04 May 2022 10:43 PM
Last Updated : 04 May 2022 10:43 PM
சென்னை: மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து நடத்தும் தேசிய கயிறு வாரிய மாநாடு நாளை கோவையில் தொடங்குகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து, இந்திய நிறுவன தேசிய கயிறு வாரிய மாநாட்டினை நாளை மே 5 -ம் தேதி லீ மெரிடியன் ஓட்டலில் நடத்துகிறது. 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் "ஆசாடி க அம்ரித் மகோத்சவ்" கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடக்கிறது. இந்த மாநாட்டில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தென்னை பயிராகும் மாநிலங்களின் அமைச்சர்களோடு மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடுகின்றனர்.
தென்னை மேம்பாட்டுக்கும், கயிறு தொழில் வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்கப்படும். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சிறப்பான தென்னை நார், கயிறு மேம்பாட்டுக்கான திட்டங்களை கலந்து ஆலோசனை செய்வதாகும். இந்த தொழில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவும், சிறந்த முறையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநில அரசுகள் முக்கிய பங்காற்றிடவும் வழி வகுக்கப்படும். மேலும் புதுமையான படைப்புகள் குறித்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் விளக்க ஒரு தளமாக இது அமையும்.
இந்த நிகழ்ச்சியில், புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புவிசார் கயிறு ஜவுளி பொருட்கள், நார் மரம், நார் மெத்தை, தரை விரிப்புகள் குறித்த நான்கு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. சந்தை மேம்பாட்டுக்கான உதவிகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
நார் தயாரிப்பின் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் அதன் பயன்பாடுகள், மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்குகள் நடக்கின்றன. தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று கருத்துரை, கட்டுரைகள் வழங்க உள்ளனர்.
தேசிய மாநாட்டின் தொடர்ச்சியாக காயர் (கயிறு) மாரத்தான் போட்டி “ரன் பார் காயர்" நிகழ்ச்சி கோவை நேரு விளையாட்டு அரங்கில் மே 6-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கருத்தாக்கம், “உலக வெப்பமயமாதலை மீட்க தீர்வு - கயிறு நார்" என்பதாகும். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு நார் தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT