Published : 30 Apr 2022 05:57 PM
Last Updated : 30 Apr 2022 05:57 PM
மும்பை: கரோனா தொற்று சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது.
கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சம்பள உயர்வு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது.
இதுபோலவே அடுத்தடுத்து 3 அலைகளால் அவ்வப்போது அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, லாக்டவுன் போன்றவற்றால் அடுத்தடுத்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
பின்னர் கரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கியது. இன்னமும் முழுமையாக பாதிப்பு விலகவில்லை என்றாலும் பெருமளவு பாதிப்பு குறைந்துள்ளது. பொருளாதாரமும் வேகமெடுத்து வருகிறது. எனினும் கடந்த 2 ஆண்டுகளில் இழந்த இழப்பு என்பது பொருளாதார ரீதியாக நீண்ட காலத்துக்கு தாக்கம் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தநிலையில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த மத்திய ரிசர்வ் வங்கி முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க 12 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்று காரணமாக உற்பத்தி இழப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.52 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் இழப்புகளை சமாளிக்க 2034-35ம் ஆண்டு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியாண்டு 21ல் ரூ,19.1 லட்சம் கோடியும், 22ல் ரூ.17.1 லட்சம் கோடியும், 23ல் ரூ.16.4 லட்சம் கோடியும் உற்பத்தி இருக்கும்.
நிதியாண்டு 21ல் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமும் நிதியாண்டு 22ல் வளர்ச்சி விகிதம் 8.9 சதவீதமாகவும் இருக்கும். நிதியாண்டு 23ல் 7.2 மற்றும் அதை தொடர்ந்து 7.5 சதவீதம் வளர்ச்சி விகிதமாக எடுத்துக் கொண்டால் 2034-35 நிதியாண்டில் தான் கரோனா பாதிப்பு இழப்புகளை சமாளிக்க முடியும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...