Published : 24 Apr 2022 11:59 PM
Last Updated : 24 Apr 2022 11:59 PM

விஐபி நம்பர் பிளேட் மோகம்: ரூ.71,000 ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் செலவிட்ட நபர்!

ஹரியானா: சண்டிகரைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய ஸ்கூட்டருக்கு விஐபி நம்பர் பிளேட் வாங்க ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வாகனங்களுக்கு வாகனப் பதிவு எண்ணாக ஃபேன்சி நம்பர் அல்லது விஐபி நம்பர் வாங்கும் மோகம் பலரிடம் காணப்படுகிறது. இதற்காக அதிகப் பணம் செலவழிக்க அவர்கள் தயங்குவதில்லை. இந்நிலையில் சண்டிகரில் உள்ள வாகனப் பதிவு எண் மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் சமீபத்தில் விஐபி எண்களை ஏலத்தில் விட்டது. அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில் சில சிறப்பு எண்களை ஏலத்தில் விடுமாறு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த ஏலம் நடைபெற்றது.

இதில் சண்டிகரைச் சேர்ந்த பிரிஜ் மோகன் என்பவர் தனது ரூ.71,000 மதிப்புடைய புதிய ஸ்கூட்டருக்கு 0001 என்ற விஐபி எண்ணை ரூ.15.44 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதன்மூலம் சமூகவலைதளங்களில் அவர் பிரபலம் அடைந்துள்ளார். சண்டிகரில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் மோகன் இதுகுறித்து கூறும்போது, “வரும் தீபாவளிக்கு புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக இந்த எண்ணை வாங்கினேன். கார் வாங்கும் வரை இந்த எண் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும்” என்றார்.

இதனிடையே சண்டிகர் வாகனப் பதிவு எண் மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் மொத்தம் 378 எண்களை ஏலத்தில் விட்டு ரூ.1.5 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. 0001 என்று முடியும் வாகனப் பதிவு எண் தற்போது 179 அரசு வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் 4 எண்கள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கான வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்களை விட்டுதர முதல்வர் முடிவு செய்ததால் ரூ.5 லட்சத்தில் தொடங்கி ஏலம் நடைபெற்றது. இந்த விஐபி எண்களுக்கு அதிக போட்டி இருப்பதாகவும் இந்த எண்களை ஏலத்தில் விடுவதன் மூலம் ரூ.18 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x