Published : 22 Apr 2022 11:55 AM
Last Updated : 22 Apr 2022 11:55 AM
புதுடெல்லி: நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி பாதிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால் இந்தியாவின் மின்சாரத் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டது.
இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி கையிருப்பு குறைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2021 நவம்பரில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு தீர்ந்தததால் 5 மாநிலங்களில் மின்தடை ஏற்படும் சூழல் உருவானது. சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டது. இதனையைடுத்து மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகம் அறிவுறுத்தியது. கூடுதலாக தேவைப்படும் நிலக்கரியை பிரீமியம் விலையில் வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனால் நிலக்கரி பற்றாக்குறை ஒரளவு குறைந்தது. இந்தநிலையில் உக்ரைன்- ரஷ்ய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளது. தேவையான நிலக்கரியும் கிடைக்கவில்லை.
கோடையில் உயரும் மின் தேவை
இதனால் 6 மாதங்களுக்குப்பின் மீண்டும் இதேபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை தற்போது 15சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால் மின்சரம் தயாரிக்க அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இல்லை.
மின்சார அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, ஏப்ரல் 18 ஆம் தேதி நிலவரப்படி மின் உற்பத்தி நிலையங்களில் அரசு வழங்கிய மானிய விலை நிலக்கரி எட்டு நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில், நிலக்கரி இருப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
50க்கும் மேற்பட்ட ஆலைகளில் 10 சதவீதத்துக்கும் குறைாவக சரிந்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைந்ததால், அனல்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் ஆந்திரா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் மின்வெட்டு அமல்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
கூடுதல் விலை கொடுத்து நிலக்கரியை தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதி செய்து வருகின்றன. மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ள அனுமதியின் பேரில் இந்த இறக்குமதி நடைபெறுகிறது. கூடுதல் விலைகொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வைத்து தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நிலைமை சீரடையாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT