Last Updated : 20 Apr, 2022 06:56 AM

 

Published : 20 Apr 2022 06:56 AM
Last Updated : 20 Apr 2022 06:56 AM

கோவையில் கரோனா ஊரடங்குக்கு பிறகு தற்போது புதிதாக தொழில் தொடங்க முன்வருவோர் அதிகரிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, புதிதாக தொழில் தொடங்க முன்வருவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால், கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முடங்கிக் கிடந்த பல்வேறு துறைகளும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக கரோனா கட்டுப்பாடுகளால் முடங்கிக் கிடந்த தொழில் துறை, தற்போது மெல்லமெல்ல பழைய நிலையை நோக்கி திரும்புகிறது.

கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் சிறு, குறு தொழில் செய்தவர்கள் பலரும் தொழிலைக் கைவிட்டு கிடைத்த வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. புதிய தொழில்களும் தொடங்கப்படாததால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழலும் தடைபட்டது.

தற்போது கோவை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க முன்வருவோர், அதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாவட்ட தொழில் மையம் மூலமாக படித்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கல் திட்டம், தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல், தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குதல், பல்வேறு தொழில் பயிற்சி திட்டங்கள், தொழில் முனைவோரைக் கண்டறிந்து தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா காலத்தில் புதிதாக தொழில் தொடங்க ஆலோசனை மற்றும் வங்கிக் கடன் கேட்டு வரும் விண்ணப்பங்கள் சொற்ப அளவிலேயே இருந்தன. கரோனா ஊரடங்குக்குப்பின் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் நீட்ஸ் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் புதிதாக தொழில் தொடங்க முன்வருவோ ரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 15 முதல் 20 விண்ணப்பங்கள் சராசரியாக வரத் தொடங்கிவிட்டன. தொழில் தொடங்க ஆலோசனை கேட்டு வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது, என்றனர்.

இதுகுறித்து மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கார்த்திகை வாசன் கூறும்போது, ‘‘கடந்த செப்டம்பர் முதல் மார்ச் வரை 150 விண்ணப்பங்கள் வரை புதிதாக தொழில் தொடங்க வரப்பெற்றுள்ளன. கரோனா காலத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம். இது தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் நிலவுவதையே காட்டுகிறது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x